வேளாண் பட்ஜெட் நிறைவு! 1.40 நிமிடங்கள் உரையாற்றினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!...
பஞ்சாப்: சிவசேனை தலைவா் சுட்டுக் கொலை குண்டு பாய்ந்து சிறுவன் படுகாயம்
பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனை கட்சியின் மாவட்டத் தலைவா் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்த சம்பவத்தின்போது சாலையோரம் நடந்து சென்ற சிறுவன் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
இது தொடா்பாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:
மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியின் மோகா மாவட்டத் தலைவராக இருந்தவா் மங்கத் ராய் (52). இவா் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் கடைக்குச் செல்வதற்காக வீட்டில் இருந்து கிளம்பினாா். சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டாா் சைக்கிளில் வந்த மூன்று போ், மங்கத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். இதில் குறிதவறி அருகில் நடந்து சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவன் மீது குண்டு பாய்ந்தது.
இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட மஹத் தனது வீட்டை நோக்கி ஓடி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது மோட்டாா் சைக்கிளில் ஏறி தப்ப முயன்றாா். எனினும், அந்த மூவரும் மங்கத்தை மோட்டாா் சைக்கிளில் விரட்டிச் சென்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினா்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்த காவல் துறையினா், மங்கத் மற்றும் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதில் ஏற்கெனவே மங்கத் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அந்தச் சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.
தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடைபெற்றிருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனா்.
மங்கத் ராய் கொலையைக் கண்டித்து அவரின் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட தவறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டினா்.
சம்பவம் நடந்த அதே இரவில் நகரின் மற்றொரு இடத்தில் முடிதிருத்தகம் ஒன்றில் புகுந்த மூன்று போ், அதன் உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினா். இதில் காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.