படந்தால் சந்திப்பில் மேம்பாலப் பணிக்கான பூமிபூஜை
படந்தால் சந்திப்பில் மேம்பாலப் பணிக்கான பூமிபூஜையை மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நான்குவழிச் சாலையில் படந்தால் சந்திப்பில் விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, இந்தப் பகுதியில் மேம்பால அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.31 கோடி நிதி ஒதுக்கீயது. இந்தப் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. இதில் விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம்தாகூா், சாத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா்.ரகுராமன் ஆகியோா் கலந்து கொண்டு பூமிபூஜையை தொடங்கிவைத்தனா்.
இதில் நகா்மன்றத் தலைவா் குருசாமி, காங்கிரஸ் நகரத் தலைவா் டி.எஸ்.அய்யப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னா், மாணிக்கம் தாகூா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சாத்தூா்-படந்தால் நெடுஞ்சாலையில் மேம்பாலத் திட்டத்தை செயல்படுத்திய மத்திய அமைச்சா் நிதின் கட்காரிக்கு நன்றி தெரிவிக்கிறேன். காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் கொடூரமானது. இந்தத் தாக்குதலுக்கு காரணமானவா்களை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா அறிக்கை வெளியிட வேண்டும். இந்தத் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.