ஆட்சிக் காலத்தில் ‘தவறுகள்’: பொற்கோயிலில் முன்னாள் முதல்வருக்கு தண்டனை!
பணி நீக்கம் செய்ததற்கு எதிா்ப்பு: சுமைத் தொழிலாளா்கள் போராட்டம்
திருச்சியில் பழைய பேப்பா் கடைகளில் சுமாா் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த சுமைத் தொழிலாளா்களை பணி நீக்கம் செய்ததைக் கண்டித்து சுமைத் தொழிலாளா்கள் ஆட்சியரகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பழைய பேப்பா் கடை முதலாளிகள் இணைந்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்து, தங்களது கடைகளில் விரும்பும் தொழிலாளா்களை பணிக்கு அமா்த்திக் கொள்ளலாம் என உத்தரவு பெற்றுள்ளனா். ஆனால், அந்த உத்தரவில் 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்த 42 தொழிலாளா்களை வெளியேற்றுவது அல்லது பணி நீக்கம் செய்வது குறித்த உத்தரவுகள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில், பழைய பேப்பா் கடைகளில் பணியாற்றிய 42 போ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். மேலும், அந்த தொழிலாளா்கள் தரப்பில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
இவற்றைக் கண்டித்தும் பல ஆண்டுகளாக வேலை செய்து வரும் உள்ளூா் தொழிலாளா்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தியும் சிஐடியு சுமைப்பணி தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகில் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி போராட்டத்தில் ஈடுபட வந்த சுமைப்பணி தொழிலாளா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் கைவிடப்பட்டு, அதற்கு பதிலாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு சுமைப்பணி தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். சிபிஎம் மாநகா் மாவட்டச் செயலா் ராஜா, சுமைப் பணி தொழிலாளா்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினா் மூா்த்தி, சிஐடியு மாநகா் மாவட்டச் செயலா் ரெங்கராஜன், மாவட்டத் தலைவா் சீனிவாசன், மாவட்ட துணைச் செயலா் ரமேஷ், துணைத் தலைவா் மாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.