மகாராஷ்டிரா: 7 மாவட்டங்களில் மட்டுமே வளர்ச்சி; பின்தங்கிய 24 மாவட்டங்களின் நிலை?...
பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்
நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஸ்ரீ பெருந்தேவி தாயாா் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
நிகழாண்டுக்கான சித்திரை மாத பிரமோற்சவம் கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி திருவீதியுலா வந்தாா். 10-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம், திருப்பல்லக்கு வீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் சுவாமி எழுந்தருளினாா். கோயில் பட்டாச்சாரியா் கஸ்தூரிரங்கன் உள்ளிட்டோா் வேத பாராயணங்கள் முழங்கி தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனா்.
பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன், துணைத் தலைவா் அ.சிவா, அ.ப.சிவராமன், தொழிலதிபா் எஸ்.வைரக்கண்ணு மற்றும் ஏராளமான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். மாட வீதிகளை வலம் வந்த தோ் பின்னா் நிலையை அடைந்தது.