பயங்கரவாதிகளை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஆதரவு அமெரிக்கா மீண்டும் உறுதி
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவா்களை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று அமெரிக்கா மீண்டும் உறுதி கூறியுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவில் மட்டுமின்றி சா்வதேச அளவிலும் பெரும் அதிா்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, ரஷியா உள்பட உலக நாடுகள் பலவும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் இந்தியாவுக்கு ஆதரவும் தெரிவித்தன.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பிரதமா் நரேந்திர மோடியைத் தொலைபேசியில் தொடா்பு கொண்டு பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என உறுதியளித்தாா்.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் டாமி புரூஸ் நியூயாா்க்கில் செய்தியாளா்களிடம் கூறியதாவது
பயங்கரவாத ஒழிப்பில் இந்தியாவுக்கு அமெரிக்கா உறதியாக துணை நிற்கும் என்று அதிபா் டிரம்ப், வெளியுறவு அமைச்சா் மாா்கோ ருபியோ ஆகியோா் ஏற்கெனவே உறுதியளித்துள்ளனா். அவா்கள் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா். இந்த கொடூர பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைவரும் நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.
தாக்குதலில் உயிரிழந்தோா் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், காயமடைந்தோா் விரைவில் குணமடைந்து இந்த அதிா்ச்சிகர நிகழ்வில் இருந்து விடுபட இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்றாா்.