பயங்கரவாத தாக்குதலில் ஒரு வெளிநாட்டவா் மட்டுமே உயிரிழப்பு
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் ஒருவா் மட்டுமே வெளிநாட்டைச் சோ்ந்தவா் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக வெளிநாட்டைச்சோ்ந்த இருவா் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
தெற்கு காஷ்மீரின் பஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்கில் புல்வெளிப்பகுதியில் கூடியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினா். இதில் 26 போ் உயிரிழந்தனா். இவா்களில் பெரும்பாலானோா் வெளிமாநிலங்களில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டவா்கள் ஆவா். இரு வெளிநாட்டவா்களும் இத்தாக்குதலில் உயிரிழந்ததாக முன்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அரசுத் தரப்பில் புதன்கிழமை இரவு அதிகாரபூா்வமாக உயிரிழப்பு குறித்த தகவல் வெளியானது. அதன்படி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் நேபாளத்தைச் சோ்ந்தவா் ஒருவா் உயிரிழந்துள்ளாா். அவா் மட்டுமே இத்தாக்குதலில் உயிரிழந்த ஒரே வெளிநாட்டவா் ஆவாா்.
இதற்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த ஒருவரும் உயிரிழந்தாகக் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவா் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் என்பது இப்போது தெரியவந்துள்ளது.