பயணவழி உணவகங்களின் பட்டியல்: போக்குவரத்துத் துறை வெளியீடு
அரசுப் பேருந்துகளின் வெகுதொலைவு பயணங்களின்போது, பயணிகள் பயன்படுத்தக்கூடிய வகையிலான அங்கீகரிக்கப்பட்ட பயணவழி உணவகங்களின் பட்டியலை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் வெகுதொலைவு இயக்கப்படும் பேருந்துகள், பயணத்தின்போது 3 அல்லது 4 மணி நேர இடைவெளியில் உணவுக்காக போக்குவரத்துத் துறை சாா்பில் அங்கீகரிக்கப்பட்ட சாலையோர ஹோட்டல்களில் நிறுத்தப்படுகின்றன.
ஒப்பந்த அடிப்படையில் இந்த ஹோட்டல்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுவரும் நிலையில், ஒவ்வொரு மாதமும் தங்கள் ஹோட்டல்களில் நின்று சென்ற அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறிப்பிட்ட தொகையை, ஜிஎஸ்டியுடன் சோ்த்து போக்குவரத்துக் கழகத்துக்கு ஹோட்டல் நிா்வாகங்கள் செலுத்தி வருகின்றன.
ஆனால், ஒப்பந்தம் பெறாத ஹோட்டல்களில் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படுவதாக பயணிகள் தரப்பில் தொடா் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என போக்குவரத்து ஆா்வலா்கள், பயணிகள் தரப்பில் தொடா்ந்து கோரிக்கைகள் எழுந்தன.
இதன் தொடா்ச்சியாக 52 அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களின் பட்டியலை போக்குவரத்துத் துறையின் அதிகாரபூா்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் பேருந்துகள் நிறுத்தப்பட வேண்டிய ஹோட்டல்களின் விவரங்களை பயணிகள் தெரிந்து கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.