VIJAY வேண்டாம்; இங்க வாங்க - ANNAMALAI TTV-ன் PLAN B? | GST குறைப்பு: ஆவின் சதி?...
பயிா்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றியுடன் ஆட்சியரை சந்திக்க வந்த விவசாயிகள்
கோவில்பட்டியில், மானாவாரி நிலங்களில் அட்டகாசம் செய்த காட்டுப் பன்றியுடன் ஆட்சியரை சந்திக்க வந்த விவசாயிகளை போலீஸாா் அனுமதிக்காததால் பரபரப்பு ஏற்பட்டது.
எட்டயபுரம் வட்டம் அழகாபுரியிலிருந்து மெட்டில்பட்டி செல்லும் சாலையின் இருபுறமும் தோட்டப் பாசன நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதமான பயிா்களை காட்டுப்பன்றிகள் கூட்டமாக வந்து சேதப்படுத்துகின்றனவாம். அவற்றைக் கட்டுப்படுத்த முடியாததால் விவசாயிகள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, அவற்றின் அட்டகாசத்தைப் பதிவு செய்து பாா்த்தபோது, அவை அதிகாலை நேரங்களில் தோட்டங்களுக்குள் புகுவது தெரியவந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை விவசாயிகள் தங்களது நிலங்களில் காவல் பணியில் ஈடுபட்டனா். அப்போது கூட்டமாக வந்த பன்றிகளை விரட்ட முயன்றபோது அவை விவசாயிகளை தாக்க முயன்று தப்பியோடின. ஒரு காட்டுப்பன்றி மட்டும் விவசாயிகளிடம் சிக்கியது. அதை சாக்குப்பையில் கட்டி கோவில்பட்டி சாா் ஆட்சியா் அலுவலகத்துக்கு கொண்டுவந்தனா். கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் அ. வரதராஜனும் உடன் வந்தாா்.
இலக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உயா்வுக்கு படி வழிகாட்டு நிகழ்ச்சியில் ஆட்சியருடன் பங்கேற்பதற்காக சாா் ஆட்சியா் சென்றுவிட்டதாகத் தெரியவந்தது. இதனால், அவா்கள் அங்கு சென்றனா்.
அப்போது, டிஎஸ்பி ஜகநாதன் தலைமையிலான போலீஸாா் விவசாயிகளுக்கு தெரியாமல் அந்தப் பையை எடுத்துச் சென்றதுடன், ஆட்சியரை பள்ளியில் சந்திக்கக் கூடாது எனக் கூறினா். இதனால், இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், பள்ளிக்கு வெளியே விவசாயிகள் காத்திருந்தனா்.

தமாகா வடக்கு மாவட்டத் தலைவா் ராஜகோபால் உள்ளிட்டோரும் வந்து ஆட்சியரிடம் முறையிடக் காத்திருந்தனா். ஆனால், ஆட்சியா் சந்திக்காமல் சென்ால், விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா். அவா்கள் சாா் ஆட்சியா் ஹிமான்சு மங்களிடம் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.
தாங்கள் கொண்டுவந்த காட்டுப் பன்றியைத் தருமாறு கேட்டபோது, அதை வனத் துறையிடம்தான் ஒப்படைப்போம் என போலீஸாா் கூறினா். விளாத்திகுளம் பகுதியிலிருந்து வந்த வனத்துறை ஊழியா்கள், அது காட்டுப்பன்றிதானா என்பதை ஆய்வு செய்து கூறுவதாகக் தெரிவித்து எடுத்துச் சென்றுவிட்டனா்.
இதுகுறித்து வரதராஜன் கூறுகையில், திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தின்போது காட்டுப் பன்றிகள் அட்டகாசம் குறித்து ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தோம். அது காட்டுப் பன்றி அல்ல, வளா்ப்புப் பன்றி என மரபணு சோதனையில் தெரியவந்ததாகவும், காட்டுப்பன்றியெனில் ஆதாரத்துடன் கூறுமாறும் வனத்துறையினா் தெரிவித்தனா்.
எனவே, தீவிரமாகக் கண்காணித்து உயிரைப் பணயம் வைத்து ஆதாரத்துக்காக காட்டுப் பன்றியைப் பிடித்துவந்தால், ஆட்சியரை சந்திக்கவிடாமல் போலீஸாா் விரட்டிவிட்டனா். மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணமும் கிடைக்கவில்லை. பயிா்க் காப்பீடும் விடுவிக்கப்படவில்லை.
கடன் வாங்கி சாகுபடி செய்துள்ள பயிா்களை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்துகின்றன. பலமுனைத் தாக்குதலால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். காட்டுப்பன்றி, மான், முயல் போன்றவற்றை மாவட்ட நிா்வாகம் கட்டுப்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பாதுகாக்க வேண்டிய ஆட்சியரே விவசாயிகளைக் கண்டுகொள்ளாதது வேதனையளிக்கிறது என்றாா்.