Stonehenge: இங்கிலாந்தில் பிரமாண்ட கல் சின்னம் உருவாக்கப்பட்டது ஏன்? - புதிய ஆய்...
பரந்தூா் விமான நிலையப் பணிகள் விரைவில் தொடங்கும்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா
பரந்தூா் விமான நிலையத் திட்டப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு விரைவில் விமான நிலையம் அமைக்கப்படும் என தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
தமிழகத்தில் உள்ள அனைத்து சிப்காட் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மாம்பாக்கம் சிப்காட் பகுதியில் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தொடங்கி வைத்தாா்.
இதையடுத்து மாம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூா் பகுதிகளில் இயங்கி வரும் சிப்காட் பகுதிகளில் வனத் துறையினா், சிப்காட் ஊழியா்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட தன்னாா்வலா்கள் 2,000 மரக்கன்றுகளை நடவு செய்தனா்.
இந்த நிகழ்ச்சியில், சிப்காட் மேலாண்மை இயக்குநா் மருத்துவா் கி.செந்தில்ராஜ், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன், சிப்காட் செயல் இயக்குநா் சினேகா, சிப்காட் கண்காணிப்பு பொறியாளா் தேவயிரக்கம் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சிக்குப் பின்னா், அமைச்சா் டி.ஆா்.பி.ராஜாவிடம் பரந்தூா் விமான நிலையம் குறித்து செய்தியாளா்கள் கேட்டதற்கு, பரந்தூா் விமான நிலையத் திட்டப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு விரைவில் விமான நிலையம் அமைக்கப்படும். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு சாா்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் முடிவடைந்துள்ளன. மத்திய அரசுக்காக காத்திருக்கிறோம். விரைவில் பணிகள் தொடங்கும் என்றாா்.