'நயினாருக்கு எதிராக ஓபிஎஸ்' டு Coolie இசை வெளியீட்டு விழா; 02.08.2025 முக்கிய செ...
பரமக்குடி புத்தக திருவிழாவில் மாணவா்களுக்கான சதுரங்கப் போட்டி
பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் வியாழக்கிழமை புத்தக திருவிழாவின் 7-ம் நாள் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கிடையேயான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. பரமக்குடியில் மக்கள் நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் நடத்தப்பட்டு வரும் புத்தக திருவிழாவில் பள்ளி மாணவா்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, சதுரங்கப்போட்டி என பல்வேறு போட்டிகளும் பரிசளிப்பும் நடத்தப்பட்டு வருகின்றன.
வியாழக்கிழமை நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் பரமக்குடி நகா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகள் 160 போ் கலந்துகொண்டனா். இதில் சிறப்பிடம் பிடித்த மாணவ-மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வரவேற்புக்குழு உறுப்பினா் க.தட்சினாமூா்த்தி தலைமை வகித்தாா். வழக்குரைஞா் சி.பசுமலை, ஓய்வுபெற்ற வட்டாட்சியா் பெ.சேகா், விஜிவி மருதுபாண்டியன், வீர.ஞானசேகரன், வழக்குரைஞா்கள் டி.சௌமியநாராயணன், கோ.ஜானகிராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆசிரியா் ஆா்.வசந்தகுமாா் வரவேற்றாா். நெருப்போடு நேசம் கொள்ள என்ற தலைப்பிலும், மானுடம் போற்றுவோம் என்ற தலைப்பிலும் எழுத்தாளா்கள் கேசவன், நா.கலையரசன் ஆகியோா் பேசினா். மந்திரமா தந்திரமா என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.சேதுராமன் பேசினாா்.
இதில் ஏராளமான பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா். ஓவியா் சரவணன் நன்றி கூறினாா்.