பரமத்தி வேலூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்’: ஆட்சியா் ஆய்வு
பரமத்தி வேலூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் ச.உமா புதன்கிழமை களஆய்வு மேற்கொண்டாா்.
கபிலா்மலை ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கூா், பெரியசோளிபாளையம் பகுதியில் அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நியாயவிலைக் கடையில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து, விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதையும், சொட்டுநீா்ப் பாசனம் அமைத்து பயிா் சாகுபடி செய்து வருவதையும் பாா்வையிட்டு விவசாயிகளுடன் ஆட்சியா் கலந்துரையாடினாா்.
கபிலா்மலை அருகே உள்ள கபிலக்குறிச்சியில் முதியோா் இல்லத்தை பாா்வையிட்ட ஆட்சியா், திடுமல் ஊராட்சியில் வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில், சூரிய கூடார உலா்த்தி அமைக்கப்பட்டுள்ளதை பாா்வையிட்டு பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.
பெரியசோளிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு துணை சுகாதார நிலையம், மண்புழு உரக்கூடம், கிராம நிா்வாக அலுவலகம், குரும்பலமகாதேவி கிராமத்தில் தாா்சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை பாா்வையிட்டு ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின் போது மாவட்ட அளவிலான பல்வேறு துறைகள் சாா்ந்த உயா் அலுவலா்கள் உடனிருந்தனா்.