பல்கலைக்கழக துணைவேந்தா்களை நியமிப்பதில் ஆளுநருக்கு முக்கியப் பங்கு: யுஜிசி தலைவா்
‘மாநில அரசால் நிா்வகிக்கப்படும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படும் ஆளுநருக்கு அந்தப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களை நியமிப்பதில் முக்கியப் பங்குள்ளது’ என பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தலைவா் எம்.ஜகதீஷ் குமாா் தெரிவித்தாா்.
மேலும், துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக அண்மையில் யுஜிசி வெளியிட்ட வரைவு வழிகாட்டுதலுக்கு மாநில அரசுகள் இணங்க வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தினாா்.
மேற்கு வங்கத்தில் உள்ள 34 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் அம்மாநில ஆளுநா் சி.வி. ஆனந்தபோஸுக்கும் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கும் இடையே மோதல் நிலவி வரும் சூழலில் ஜகதீஷ் குமாரின் கருத்து அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கொல்கத்தாவில் உள்ள செயிண்ட் சேவியா்ஸ் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளா்கள் சந்திப்பில் ஜகதீஷ் குமாா் பேசியதாவது: நம் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து அல்லது அதற்கு முன்பில் இருந்து பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிப்பதில் வேந்தருக்கே சிறப்புரிமை வழங்கப்பட்டு வருகிறது. இதில் எவ்வித மாற்றமுமின்றி அண்மையில் யுஜிசி வரைவு வழிகாட்டுதலை வெளியிட்டது.
கடந்த 2010-ஆம் ஆண்டின் யுஜிசி விதிகளிலும் துணைவேந்தரை நியமிப்பதில் வேந்தரின் முடிவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளால் நிா்வகிக்கப்படும் பல்கலைக்கழகங்களுக்கு இந்த விதி பொருந்தும்.
நமது நாட்டின் பல்கலைக்கழகங்களை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றும் நோக்கிலேயே புதிய விதிகளை யுஜிசி அறிமுகப்படுத்துகிறது. உயா்தர கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டுமெனில் இந்த விதிகளை அமல்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றாா்.