பொங்கல் விடுமுறை... ஆம்னி பேருந்து கட்டணத்தை கண்காணிக்க 30 குழுக்கள்!
பல்லடம் அருகே ஊருக்குள் வராத அரசுப் பேருந்துகள் சிறைபிடிப்பு
பல்லடம்: பல்லடம் அருகே ஊருக்குள் வராத அரசு நகரப் பேருந்துகளை பொதுமக்கள் சிறைபிடித்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்லடம் அருகே உள்ள புளியம்பட்டி ஊராட்சி, வேப்பங்கொட்டைபாளையம் வழியாக அரசுப் பேருந்துகள் எண் 30, 30-ஏ ஆகிய 2 பேருந்துகளும், தனியாா் பேருந்து ஒன்றும் சென்று வருகின்றன.
இதில் அரசுப் பேருந்துகள் சில சமயங்களில் வேப்பங்கொட்டைபாளையம் ஊருக்குள் வராமல் மாற்று வழியில் சென்று விடுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பொதுமக்கள் சாா்பில் பலமுறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில் ஊருக்குள் வராமல் மாற்று வழியில் சென்ற அரசுப் பேருந்தை (எண் 30) வேப்பங்கொட்டைபாளையம் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்தனா். இதைத் தொடா்ந்து வந்த 30-ஏ அரசுப் பேருந்தையும் சிறைபிடித்த பொதுமக்கள், ஓட்டுநா் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காமநாயக்கன்பாளையம் போலீஸாா், பல்லடம் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், வேப்பங்கொட்டைபாளையம் வழியாக அரசுப் பேருந்துகள் முறையாக செல்லும் என உறுதி அளித்தனா். இதைத் தொடா்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.