விடுப்பில் வந்து தலைமறைவான புழல் கைதி 6 மாதத்துக்கு பிறகு சூலூரில் கைது!
பல்லேலக்கா-4 : தொடரும் காத்திருப்பு! | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.
முன் கதைச் சுருக்கம்:
பல் வலியின் காரணமாகப் பல் மருத்துவமனைக்கு வந்துள்ளேன். அங்கே பணிபுரியும் நர்ஸ்க்கு மானசீகமாக மெல்லிசை எனப் பெயர்வைத்து டாக்டருக்காகக் காத்திருக்கிறேன்.
தொடர்ச்சி…
டாக்டர் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். பல் வலி ஏறி இறங்கி விளையாண்டு கொண்டிருக்கிறது. பல்வலியைவிட காத்திருப்பு வலியும் அதிகமானது. டாக்டர் வருகிறாரென்றால் ஒரு கணித வகுப்புக்கு மாணவர்கள் தயாராவது போல வரவேற்பு அறை பரபரக்கும்.
அதெற்கென வைக்கப்பட்ட ஜியாமெண்டரி நோட் மேசைக்கு வரும். ஸ்கேல் தேடுவோம். பென்சில் சீவி வாராண்டாவை எட்டிப்பார்ப்போம். நிமிர்ந்து உட்காருவோம். இதுபோல நர்ஸ்கள் தங்களுக்குள் கூடிப் பேசி ஆளுக்கொரு வேலையைச் செய்வார்கள்.
வேகத்தடையில் ஏறி இறங்கிய பேருந்து வேகமெடுப்பது போல வேலைகள் சுறுசுறுப்பாக நடக்கும். வரவேற்பறைகளில் அதுவரை இருந்த காட்சிகள் மாறும். நர்ஸ்கள் பேச்சு தொனியில் குரல் சற்றே உயரும். இதெல்லாம் எதுவும் நடக்கவில்லை என்பதால் இப்போதைக்கு டாக்டர் வரும் அறிகுறி ஏதும் தென்படவில்லை.
மெல்லிசையைப் பார்த்தேன். அவர் அப்போது தனது கைப்பையைத் திறந்து சிவப்பு தண்ணீர்ப்பாட்டிலை எடுக்கத் தயாரானார்.
ஒருவரின் ரசனையைக் கைப்பையையும் தண்ணீர் பாட்டிலையும் வைத்து ஓரளவு கணிக்கலாம். ஓரளவு என்பது இங்கு நூறு சதவிகிதத்தைத் தாண்டியது. அந்த வகையில் மெல்லிசையின் கைப்பை நடுத்தர ரசனையை எடுத்துக்காட்டியது. ரசனையின் அளவுகோல் என்ன? அது அவரவர் பார்வையைச் சார்ந்தது.
எனக்கு சிறுவயதில் சொம்பில் தண்ணீர் குடிக்கும் போது தண்ணீரைச் சட்டைமீது ஒழுக்கிக்கொண்டே குடிப்பதில் தான் அலாதி சந்தோசம்.
மெல்லிசை தண்ணீர் குடிக்கும்போது சிட்டுக்குருவி தண்ணீர்குடிப்பது போல “மொடக் மொடக்”என்ற சப்தம் கேட்டது. அது தண்ணீர் தொண்டையில் நின்று உள்ளே விழ அனுமதிகேட்கும் சத்தமா? அல்லது அவரின் எட்டுமணி நேரம் உழைப்பின் கடிகாரமா? என நம்மை சிந்திக்க வைக்கும் என்றெல்லாம் நினைத்தேன். சில சமயம் நமக்கும் இப்படிதான் சலித்த உலக உருண்டை விக்கி தண்ணீராக உள்ளே இறங்கும்.
தண்ணீர் தொண்டையில் இறங்கிய பின் ஒரு நொடி நின்று பாட்டிலைப் பார்க்கும் தருணம் தியானங்கள் எல்லாம் தோற்றுவிடும். அந்த மயான அமைதியில், அந்த நொடியில் எதுவும் ஞாபகம் இருக்காது. அனைத்து நினைவுகள் தண்ணீரோடு விழுங்கியிருப்போம். தாகம் தீர்த்த அந்த நொடிகள் அலைகள் மோதிய பின் வரும் அமைதி. அந்தக் கணம் தான் ஜென் நிலை.
கல்லென் துவலை தூவலின் யாவரும்
தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார் ( நக்கீரர், நெடுநல் . 7: 62 – 63)
கோபத்தை, தாபத்தை, சாபத்தை என அனைத்திற்கும் இந்தத் தாகசாந்தி தரும் சமாதானம் வேறெங்கும் கிடைக்காது என்பது உண்மை. எனக்கும் கொஞ்சமாவது தண்ணீர் குடிக்கலாம் என ஓர் உந்தல் வந்தாலும் என்னால் வாயில் பஞ்சை வைத்துக்கொண்டு தண்ணீர் எப்படிக் குடிக்க முடியும்?
மெல்லிசை அறைக்கு வெளியே போனார். என்னைக் கடக்கும்போது என்னைப்பார்த்துப் புன்னகைத்து விட்டார். நான் பதிலுக்குப் புன்னகைப்பதா? வேண்டாமா? என யோசிப்பதற்கான அந்த நொடிக்குள் சிரித்துவிட்டேன். பிறகு இந்த சிரிப்புதான் வெளியில் புழங்குவதற்கு மனிதர்களுக்கான ஆயுதம் என என்னைத் தேற்றிக்கொண்டேன்.
இந்த முகம் மலர்தல் ஒரு தொழிற்நேர்த்தி! ஒருமுறை கோவையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் சாதா ரோஸ்டை சதா புன்னகையோடு பரிமாறினார் ஒரு பெண்.
அந்த சிரிப்பில் மயங்கிய தோழி ”காபி வித் அவுட் காபி” என ஆர்டர் செய்து கலகலப்பாக்கினாள். மேடம் ”காபி வித் அவுட் காபி” ரயில் நிலையங்களில் கிடைக்கும் என அவள் பங்குக்குக் கொளுத்திப்போட்டாள். நாங்கள் சிரிப்பது பக்கத்து மேசையில் இருப்பவர்களுக்குப் புரையேறியிருக்கலாம். உண்மைதான் ”காபி வித் அவுட் காபி” 24 மணிநேரமும் ரயில் நிலையங்களில் கிடைக்கும். மருந்துக்குக்கூடக் காபி மணம் வராது.
நம் கூடவே இருக்கும் நண்பர்களுக்கு சுகர் இருப்பதே ”வித் அவுட் சுகர்” எனச்சொல்லும்போது தான் தெரிய வருகிறது. மற்றபடி இனிக்க இனிக்கப் பேசுவதையெல்லாம் வைத்து சுகர் இருப்பதாக நம்பிவிடக்கூடாது.
அன்று அவரின் உபசரிப்பால் என்னவோ சுவை சார்ந்த பெரிய அளவு புகார் யாரும் வாசிக்கவில்லை. அடையாள அட்டையை வாசித்தவர்கள் அவள் பெயர் ”கிட்டாள்” என்றார்கள். மூன்று பேர் வெவ்வேறு ராகங்களில் ஆர்டர் செய்தாலும் ஒரே வகையான சிரிப்பு தான். இவள் வேறெங்கும் கிட்டாள்.
அவள் சிரிப்பில் மட்டுமல்ல பெயரிலும் ஒரு கதை சொல்கிறாள். எனது பெயர் சமூகத்திற்கு ஒரு கதை சொல்கிறது. அதுபோலவே, பெண் பிள்ளை கிட்டாமல் வரம் வேண்டிப் பிறந்தவளாக இருக்கக்கூடும். இது நவீனப் பெயராக இருக்க வாய்ப்பில்லை. என்னைப்போலவே, பெயரால் அடையாளப்படுத்தப்பட்டு இருப்பாள். அந்த அடையாளத்திலிருந்து வெளியே வரச் சிரிக்கவேண்டியிருக்கிறது.
அந்த கிட்டாளுக்காகவே திரும்பும்போது மீண்டும் அதே ஹோட்டலுக்குப் போனோம். அந்தப் புன்னகைக்கு வேலை நேரம் முடிந்திருந்தது.
இவர்களையெல்லாம் நினைக்கும்போது எனக்குப் பிடிபடாத இந்த நுட்பத்தையும் எளிமையையும் நினைத்து நறநறவென பற்களைக் கடித்தேன். பற்களுக்கிடையே அழுத்தி வைக்கப்பட்ட பஞ்சு இன்னும் சுருங்கியது. மெதுவாக வாயைத்திறந்து பஞ்சினை வெளியே எடுத்துப் பார்த்தேன்.. இலேசாக பஞ்சில் ரத்தம் கசிந்து ரெட் அலர்ட் கொடுத்தது. ரெட் அலர்ட் கொடுப்பதில் புயலும் பல்வலியும் ஒன்று தான். வெளியே நின்று கொண்டு ஆயிரம் கணிப்புகள் கொடுத்தாலும் வந்து விட்டால் பேயாட்டம் ஆடிவிட்டுத்தான் போகும்.
உண்மையில் பஞ்சில் எந்த மருந்தும் தடவப்பட்ட அறிகுறி இல்லை. பஞ்சை பாதுகாக்கக் கொஞ்சம் டெட்டாலில் முக்கி வைத்து இருந்திருப்பார்கள் போலும். உச்சக்கட்ட வலியில் அதை மருந்தெனக் கற்பனை செய்து விட்டேன். அதுமட்டுமல்ல, மெல்லிசையும் காரணமாக இருக்கலாம். இந்த நம்பிக்கை பண்டுவம் தான் வலியைக் குறைத்திருக்கிறது.
ஏசு பெருமான் தொழுநோயாளியைத் தொட்டுக் குணப்படுத்தியதும், ”மந்திரமாவது நீறு” என்ற திருப்பதிகத்தைப்பாடி திருநான சம்பந்தர் கூன் பாண்டியன் சுர நோயைத் தீர்த்ததும் நம்பிக்கை பண்டுவம் தான்.
என்னைக் காத்து, கருப்பு அண்டக்கூடாது என்பதற்காக என் இடது கையில் செம்பு வளையம் மாட்டிவிட்டிருந்தார் அப்பா. அது Cu எனத்தெரிந்து “See you” சொல்லும் வரை கையில் மாட்டியிருந்தேன். எனது அடையாளமாக அந்த வளையம் மாறிவிடக்கூடாது என்பதற்காக அதைக் கழற்றி வீசினேன். அப்புறம் எனது பெயருக்கு மதிப்பில்லாது போய் விடுமல்லவா?
பெயரில் என்ன இருக்கிறது? பெயரில் தான் எல்லாம் இருக்கிறது என்பது எனது பூர்வீக நம்பிக்கை. மெல்லிசை எனது பெயரைக்கூப்பிடும் தருணத்திற்காகக் காத்திருக்கிறேன்.
-தொடரும்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...