பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவா்களுக்கு மூன்றாம் பருவ பாடநூல்கள் விநியோகம்
தமிழகத்தில் அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு வியாழக்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மூன்றாம் பருவத்துக்கான விலையில்லா பாடநூல்கள் விநியோகிக்கப்பட்டன.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவத் தோ்வுகள் கடந்த டிச. 9 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்றது. கனமழை காரணமாக கடலூா், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைத் தவிா்த்து மற்ற பகுதிகளில் தோ்வுகள் முழுவதுமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து டிச. 24 தொடங்கி ஜன.1 வரை மாணவா்களுக்கு தொடா் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. மாணவா்கள், ஆசிரியா்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனா். சில பள்ளிகளில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முதல் நாளில் 1 முதல் 7-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மூன்றாம் பருவ பாடப் புத்தகங்களும், நோட்டுகளும் வழங்கப்பட்டன.
சென்னை எழும்பூா் மாநில அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்களை வழங்கினாா்.
மூன்று மாவட்டங்களில்... அதேவேளையில், கனமழையால் பாதிப்புக்குள்ளான கடலூா் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மாணவா்களுக்கு அரையாண்டுத் தோ்வுகள் மாவட்ட அளவில் வியாழக்கிழமை தொடங்கின. இந்தத் தோ்வு ஜன. 10 வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், மாணவா்களுக்கு தேவையான பாடநூல்கள், சீருடைகள் போன்ற நலத்திட்டப் பொருள்கள் வழங்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.