தலைமை நிர்வாக அதிகாரி பதவி நீட்டிப்புக்குப் பிறகு இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள்...
பள்ளிக் காதலால் சந்தேகம்; மனைவியை சிக்கவைக்க விஷம் குடித்த புது மாப்பிள்ளை பலி - நடந்தது என்ன?
கடலூர் மாவட்டத்திலுள்ள கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் என்பவருக்கும், மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த பிரியா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்பவருக்கும் கடந்த ஜனவரி 25-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கலையரசனின் தந்தை சுந்தரமூர்த்தி கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்திருக்கும் புகார் மனுவில், `என் மகனுக்கும், பிரியா என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
ஆனால் வேறு நபரை காதலித்து வந்த அந்தப் பெண்ணுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. அதனால் அந்தப் பெண்ணை அவர்கள் வீட்டிற்கு அனுப்பிவிட்டோம். ஆனால் அந்தப் பெண்ணின் வீட்டார் அவரை சமாதானப்படுத்தி எங்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்தப் பெண் என் மகனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துவிட்டார்.

`விஷம் கொடுக்கப்பட்டதா?’
அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கலையரசன், ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் தன்னுடைய மனைவிதான் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக கூறியிருந்தார். ஆனால் அந்த வழக்கு குறித்து நம்மிடம் பேசிய புதுச்சத்திரம் போலீஸார், ``மனைவி தன்னை மதிக்கவில்லை என்றும், தன்னுடன் வாழவில்லை என்ற விரக்தியில் இருந்த கலையரசன், சுடுகாட்டுப் பகுதியில் அமர்ந்து அவரேதான் விஷம் குடித்திருக்கிறார்.
தான் விஷம் குடித்துவிட்டதாக நண்பர்களிடமும் செல்போனில் பேசியிருக்கிறார். விஷம் குடித்த பாட்டிலும் அவருடைய இருசக்கர வாகனத்தில்தான் இருந்தது. கலையரசனின் செல்போன் உரையாடல்கள், சி.சி.டி.வி காட்சி உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் கைப்பற்றி விட்டோம்.
தன்னை மதிக்காத மனைவியை பழிவாங்குவதற்காகவே கலையரசன் இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார். விசாரணை முடிவில் அனைத்தையும் வெளியிடுவோம்” என்று கூறியிருந்தனர்.
இதுகுறித்து மார்ச் 2-ம் விகடன் இணையப்பக்கத்தில் `மனைவி விஷம் கொடுத்ததாகக் கணவன் புகார் – நடந்தது சம்பவமா... நாடகமா?’என்ற தலைப்பில் எக்ஸ்க்ளூசிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கலையரசன் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பேசியபோது, ``முதலிரவு அன்று திருமணத்திற்கு முன்பு தான் ஒரு பெண்ணை காதலித்ததாக மனைவியிடம் கூறிய கலையரசன், அந்தப் பெண்ணின் பெயரை நெஞ்சில் பச்சைக் குத்தியிருந்ததையும் கூறியிருக்கிறார்.

அதையடுத்து, `நீ அப்படி யாரையாவது காதலிக்கிறாயா?’ என்றும் கேட்டிருக்கிறார். கணவரே உண்மையைக் கூறுகிறாரே என்று நினைத்த பிரியா, பள்ளியில் படிக்கும்போது தன்னை ஒருவர் காதலித்ததாக தெரிவித்திருகிறார். அதிலிருந்து மனைவி மீது சந்தேகப்பட ஆரம்பித்த கலையரசன், அவரிடம் பேசுவதை தவிர்த்திருக்கிறார். அதன் காரணமாகவே பூச்சிக்கொல்லி மருந்து குடித்த கலையரசன், அதன்பிறகு அவரது நண்பர் சுபாஷிடம் தான் விஷம் குடித்துவிட்டதாக கூறியிருக்கிறார்.
இது கலையரசனின் உறவினர்களுக்கும் தெரியும். ஆனால் இந்த வழக்கில் கலையரசனின் மனைவியை சிக்க வைக்க நினைக்கிறார்கள். இந்த விவகாரத்தில் கலையரசன் மட்டுமல்ல, அவரது குடும்பத்தினரும் நாடகம் ஆடுகிறார்கள். இது தொடர்பான ஆடியோ, வீடியோ உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்” என்கின்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
