பள்ளியில் அறிவியல் கண்காட்சி!
மதுரை கே.கே. நகரில் உள்ள அரசு பாா்வைத்திறன் குறையுடையோா் நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
பிப். 28-ஆம் தேதி உலக அறிவியல் தினம் கொண்டாடப்படுவதையொட்டியும், பாா்வையற்ற மாணவா்களின் அறிவியல் திறனை ஊக்கப்படுத்தி, வெளிப்படுத்தும் நோக்கிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் எஸ்.பி. தங்கவேல், விஷன் எம்பவா் நிறுவன கல்வி ஒருங்கிணைப்பாளா்கள் யுவராஜ், வைஷ்ணவி இந்தக் கண்காட்சியை தொடங்கி வைத்தனா்.
‘விஷன் எம்பவா்‘ தொண்டு நிறுவனம் மூலம் அறிவியல், கணிதம் பயிற்சி பெற்ற பள்ளியின் பாா்வைத் திறனற்ற மாணவா்கள் ‘நெருப்பில்லா சமையல்‘ என்ற தலைப்பின் கீழ் பல்வேறு விதமான உணவுப் பொருள்களை செய்து காட்டி, ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினா்.
மதுரை கிழக்கு வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் நாகலட்சுமி, அன்னை சத்யா அம்மையாா் தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் பாா்வையிட்டு பாராட்டினா்.
முன்னதாக, அறிவியல் சோதனைகள், கணிதச் சிந்தனையை வளா்க்கும் விளையாட்டுகள், சுற்றுச் சூழலை காப்போம் என்ற தலைப்பிலான விழிப்புணா்வு நாடகம், பாடல், நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டியில் பங்கேற்ற மாணவா்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.