பள்ளி மாணவர்களை பாதிக்கும் ரெளடிகளின் மீம்ஸ் & ரீல்ஸ்... கொலை சம்பவங்களின் பகீர் பின்னணி
நெல்லையில் தனியார் பள்ளியில் பென்சிலை பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஏற்பட்ட விரோதத்தில் வகுப்பறையிலேயே தன் நண்பரை அரிவாளால் வெட்டியதுடன், அதனை தடுக்க முயன்ற ஆசிரியையையும் 8-ம் வகுப்பு மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட மாணவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீஸார் கூறியதாவது, “யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வன்முறை தொடர்பான வீடியோக்களை பார்த்ததால் நண்பரையும், ஆசிரியையும் அரிவாளால் வெட்டினேன். என்னை சீர்திருத்தப்பள்ளியில் சேருங்கள் எனக் கூறியுள்ளார்.
இரு மாணவர்களுக்கும் இடையே பென்சில் ஒன்றை பகிர்ந்து கொள்வதில் தகராறு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட மாணவர் இந்த பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ளார்.

காலாண்டுத் தேர்வு வரை மற்றொரு பள்ளியில் படித்து வந்த அவர், அங்கிருந்து டி.சி வாங்கிவிட்டு இப்பள்ளிக்கு வந்துள்ளார். அவர் விளையாட்டு வீரர் என்பதால் இப்பள்ளியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.” என்றனர்.
தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சமீப காலமாக பள்ளி மாணவர்களிடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் ஸ்ரீவைகுண்டத்தில் பேருந்தில் பள்ளிக்கு தேர்வெழுத வந்து கொண்டிருந்த மாணவருக்கும், நாங்குநேரியில் ஒரு பள்ளி மாணவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
தற்போது நெல்லை தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவன், சக மாணவரையும், ஆசிரியையையும் வெட்டியுள்ளார்.
இதேபோல் ராமநாதபுரம் நகர் பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அரசுத் தேர்வு எழுதிவிட்டு ஒருவரை ஒருவர் தாக்கியதோடு வெளிநபர்களை அழைத்து வந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
தென் மாவட்டங்களில் இதே போன்று மாணவர்கள் மோதிக் கொள்வதற்கு முக்கிய காரணமே தென் மாவட்ட ரெளடிகளின் மீம்ஸ் வீடியோதான் எனக் கூறப்படுகிறது.

தென் மாவட்டத்தில் பல்வேறு ரெளடி கும்பல்கள் செயல்பட்டு வருகிறது. இவர்கள், தாங்கள்தான் பெரிய ஆள், கெத்து போன்ற பெயரை வாங்க கையில் வாள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சாதி சார்ந்த வீர வசனம் பேசும் வீடியோக்களை ரீல்ஸாக வெளியிடுகிறார்கள்.
இதைப் பார்க்கும் மாணவர்கள் தங்களை ஹீரோவாக நினைத்து மோதிக் கொள்கிறார்கள். இதனாலேயே புத்தகப்பைகளில் புத்தகங்களை எடுத்துச் செல்ல வேண்டிய மாணவர்கள் ஆயுதங்களை தூக்கிச் செல்கிறார்கள்.
இதை மாணவர்களின் பெற்றோர்களும் கண்டு கொள்வதில்லை. மாணவர்களின் இந்த மனநிலையை மாற்ற உரிய கவுன்சிலிங் அளிக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
