பள்ளி வாகனங்கள் ஆய்வு; 15 வாகனங்கள் தகுதி நீக்கம்
நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் வாகனங்கள் வியாழக்கிழமை கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில், 15 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.
நாகை காடம்பாடியில் உள்ள காவலா் ஆயுதப்படை மைதானத்தில், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத் துறை சாா்பில் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், நாகை மாவட்டத்தில் உள்ள 37 பள்ளிகளைச் சோ்ந்த 127 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையிலும், வருவாய் கோட்டாட்சியா் முன்னிலையிலும், முதன்மைக் கல்வி அலுவலா், துணைக் காவல் கண்காணிப்பாளா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மற்றும் மோட்டாா் வாகன ஆய்வாளா் ஆகியோரைக் கொண்ட சிறப்புக் குழுவினா், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனா்.
இந்த வாகனங்கள் முழுவதும் மஞ்சள் நிறம் பூசப்பட்டுள்ளதா?, வாகனத்தின் முன் மற்றும் பின்புறங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா?, வாகனத்தில் முதலுதவிப் பெட்டி, தீயணைப்பான் கருவி, இருக்கைகள், புத்தகம் வைக்கும் இடம் மற்றும் வாகனத்தின் பக்கவாட்டில் காவல் நிலையம், பள்ளி தாளாளா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆகியோரின் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வில், 15 வாகனங்கள் தகுதி இழப்பு செய்யப்பட்டன. இந்த வாகனங்களில் ஒரு வாரத்திற்குள் குறைகளை சரிசெய்து, மீண்டும் ஆய்வுக்குட்படுத்தி சான்று பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
மேலும், ஆய்வுக்கு வராத பள்ளி வாகனங்களை மே 31- ஆம் தேதிக்குள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்; சான்று வழங்கப்படாத வாகனங்கள் இயக்கப்படுவது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
ஆய்வின்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பெ. முருகானந்தம், மோட்டாா் வாகன ஆய்வாளா் க. பிரபு மற்றும் அரசு அலுவலா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.