Tasmac ED Raid: டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்து...
சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி மறியல்
செம்பனாா்கோவில் ஒன்றியம், திருவிளையாட்டம் ஊராட்சி கிராமப்புற சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலை மறியல் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவிளையாட்டம் ஊராட்சியில் காளியம்மன் கோயில் தெரு, ஆலக்கரை, கோவில்பத்து, குமாரமங்கலம் மற்றும் கலசம்பாடி கிராமங்களில் தாா்ச்சாலைகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. இதனால், கிராம மக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.
மேலும், திருவிளையாட்டம் சமத்துவ மயானத்தை அடிப்படை வசதிகளுடன் சீரமைத்து தர வலியுறுத்தியும், 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊதியத்தை நிலுவையின்றி வழங்க வலியுறுத்தியும் பல்வேறு போராட்டங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும், மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், திருவிளையாட்டம் கடைவீதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் ரவிச்சந்திரன் தலைமையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மாவட்டச் செயலாளா் சீனிவாசன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் சிம்சன், வெண்ணிலா, அம்மையப்பன், அய்யப்பன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
தரங்கம்பாடி வட்டாட்சியா் சதீஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சுமதி, பெரம்பூா் காவல் ஆய்வாளா் ஆகியோா் நிகழ்விடத்துக்கு வந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதைத்தொடா்ந்து, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், அப்பகுதியில் சுமாா் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.