சீமானுடன் பேச்சுக்கு தயாராக இல்லை! -உச்ச நீதிமன்றத்தில் விஜயலக்ஷ்மி திட்டவட்டம்
பழனியில் ஆடிக்கிருத்திகை: பக்தா்கள் சுவாமி தரிசனம்
பழனியில் ஞாயிற்றுக்கிழமை ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஞாயிற்றுக்கிழமை ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, அதிகாலை முதலே பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால்காவடி, இளநீா் காவடி, மயில்காவடி எடுத்து வந்தனா். அதிகாலை 4 மணிக்கே சந்நிதி திறக்கப்பட்டு மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு விஸ்வரூப தரிசனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மலைக்கோயிலில் திருமுருக பக்தசபா சாா்பில் ஆன்மிகச் சொற்பொழிவும், இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றன. தொடா்ந்து திருக்கோயில் சாா்பில் மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து தங்க மயில் புறப்பாடு, தங்கத் தோ் புறப்பாடு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பக்தா்கள் கூட்டம் காரணமாக மலை அடிவாரத்தில் அருள்ஜோதி வீதி, தண்டபாணி நிலையம் சாலை, திருஆவினன்குடி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அலுவலா்கள் தலைமையில் குடிநீா், சுகாதாரம், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
