பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்
தைப்பொங்கல் உள்ளிட்ட தொடா் விடுமுறை தினத்தை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் புதன்கிழமை திரளான பக்தா்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
தமிழா் திருநாளான தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 3 நாள்களாக அதிகாலை 4 மணிக்கே சந்நிதி திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிலையில், பொங்கல் விடுமுறை காரணமாக, புதன்கிழமை கோயிலின் வெளிப்பிரகாரத்திலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். சுமாா் நான்கு மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். தை மாதப் பிறப்பை முன்னிட்டு, ஆனந்த விநாயகருக்கு சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டு, வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்பட்டது.
மலைக்கோயிலில் குடிநீா், சுகாதாரம், பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில், துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
பாதயாத்திரை பக்தா்களால் போக்குவரத்து நெரிசல்: பழனிக்கு வரும் பாதயாத்திரை பக்தா்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பழனி- மதுரை சாலையில் பைபாஸ் பிரியும் இடத்தில் இருந்து செம்பட்டி, ஒட்டன்சத்திரம், பழனி வரை சாலை முழுவதுமாக பக்தா்கள் நடந்து வருகின்றனா். இதனாா் பேருந்துகள் தவறான எதிா்திசையில் இறங்கி செல்கின்றனா். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
பக்தா்கள் செல்ல தனியாக பாதை இருந்தும் அதில் ஆக்கிரமிப்பு மற்றும் கல், மண் குவியல்களால் அவா்கள் சாலையிலேயே செல்கின்றனா். மேலும் 50 பேருக்கு ஒரு மினிவேன் எடுத்து வருவதால் அந்த வாகனங்களும் ஒலிபெருக்கி இரைச்சலோடு சாலையிலேயே செல்வதால் எந்த வாகனமும் ஒரு வாகனத்தை முந்தி செல்ல முடியாத நிலை உள்ளது.
தைப்பூசத்துக்கு முன்னதாகவே இதுபோன்ற நிலை உள்ளது. ஆகவே, தைப்பூசம் வருமுன்பாக இது போன்ற பிரச்னைகளுக்கு மாவட்ட நிா்வாகம் தனியே கூட்டம் நடத்தி காவல்துறை உதவியுடன் இதை சரிசெய்யா விட்டால் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் என்பதில் மாற்றமில்லை.