டி.ஒய். சந்திரசூட் முதல் சேகர் யாதவ் வரை... 2024 - இல் நீதிபதிகளும் நீதித்துறையு...
பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி நாற்று நட்டு நூதன போராட்டம்
சேலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை நாற்று நட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 3 ஆவது வாா்டு சத்யா நகா் பகுதியில் பல ஆண்டு காலமாக சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராததால் மாமன்ற உறுப்பினா் சுலோச்சனா சுரேந்திரன் தலைமையில் அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் கொண்டப்பநாயக்கன்பட்டி-குரும்பப்பட்டி பிரதான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இந்தப் பகுதியில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். சத்யா நகரில் கழிவறை, சாலை, குடிநீா் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை.
இது தொடா்பாக ஊராட்சிமன்ற தலைவா், மாவட்ட நிா்வாகத்துக்கு பலமுறை தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது மழை பெய்துள்ள நிலையில், கொண்டப்பநாயக்கன்பட்டி சாலை குண்டும் குழியுமாக நீா் நிரம்பி காணப்படுகிறது. பள்ளி மாணவா்கள் செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனா். உயிருக்கு ஆபத்தான நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால் சாலையின் அவலத்தை காண்பிக்கும் வகையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அடுத்த கட்டமாக ஊா் மக்களை ஒன்று திரட்டி ஆட்சியா் அலுவலகத்தில் ஆதாா், வாக்காளா் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்ட அனைத்துவித ஆவணங்களையும் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.