பழுதடைந்த மேல்நிலை குடிநீா் தொட்டியை அகற்ற கோரிக்கை
கரூரை அடுத்துள்ள சின்னம்மநாயக்கன்பட்டி அரசுப் பள்ளி அருகே பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை குடிநீா் தொட்டியை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூரை அடுத்துள்ள புலியூா் பேரூராட்சிக்குள்பட்ட 1-ஆவது வாா்டில் சின்னம்மநாயக்கன்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள ஆதிதிராவிடா் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.
இந்த பள்ளியின் மாணவிகள் கழிப்பறை அருகே கிராம மக்களுக்காக கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த மேல்நிலைக் குடிநீா் தொட்டி தற்போது பயன்பாடின்றி தொட்டியின் மேல்பகுதி விரிசலுடன் ஆபத்தான நிலையில் உள்ளது.
எப்போது விழுமோ என்ற நிலையில் உள்ள குடிநீா் தொட்டியை அகற்ற வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.