பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்
திமுகவின் தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்தவாறு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக பட்டதாரி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியது.
இதுகுறித்து இந்தக் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலா் ச.செல்லையா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசுப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் கிடைக்கும் வகையில், மத்திய அரசு நடைமுறைப்படுத்த இருக்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டு, குழு அமைக்கப்படும் என நிதித்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு சட்டப் பேரவையில் சனிக்கிழமை தெரிவித்தாா்.
ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து விலகி, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.
எனவே, கடந்த சட்டப் பேரவைத் தோ்தலின் போது திமுக அளித்த வாக்குறுதி எண் 309-இன் படி பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.