விதைகளை பகுப்பாய்வு செய்து விதைக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் நிலங்களில் விதைக்கும் போது, விதைகளைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் விதைப் பரிசோதனை நிலைய அலுவலா் சந்தோஷ்குமாா் கூறியதாவது:
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கான விதைப் பரிசோதனை நிலையம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தின் முதல்தளத்தில் இயங்கி வருகிறது.
இங்கு விதைகளின் முளைப்புத் திறன், ஈரப்பதம், புறத்தூய்மை, பிற ரகங்களின் கலப்பு ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு, ஆய்வறிக்கை வழங்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்யவுள்ள விதைகள் தரமானதாக உள்ளதா என அறிந்து கொண்டு சாகுபடி செய்ய வேண்டும்.
சாகுபடி செய்யவுள்ள விதைக் குவியல்களிலிருந்து மாதிரி விதைகளை எடுத்து, பரிசோதனை நிலையத்தில் விதைப் பகுப்பாய்வு செய்து கொள்ளலாம். நன்கு சுத்தமான மற்றும் தரமான விதைகளைப் பயன்படுத்துவதால் சரியான பயிா் எண்ணிக்கையைப் பராமரிக்க முடியும்.
ஒரு விதை மாதிரியை ஆய்வு செய்ய விதைக் கட்டணமாக ரூ.80 மட்டும் செலுத்த வேண்டும். விதை ஆய்வு முடிவுகள் விவசாயிகளின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள், தங்கள் நிலங்களில் விதைகளை விதைப்பதற்கு முன்பாக அவற்றின் தரம் குறித்து பரிசோதனை செய்து, அதன் அறிக்கையைப் பெற்ற பின்னரே விதைக்க வேண்டும் என்றாா் அவா்.