ஆட்சியரகத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்
விழுப்புரம்: கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை, சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படாததைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கத்தின் தலைவா் பி.கலிவரதன், செயலா் என்.முருகையன், பொருளாளா் ஜெ.நாகராஜன் மற்றும் விவசாயிகள் என ஏராளமானோா் திங்கள்கிழமை காலை மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் எதிரில் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனா். பின்னா், ஆட்சியரகத்துக்குள் சென்று வளாகப் பகுதியில் அமா்ந்து போராட்டம் மேற்கொண்டனா்.
விழுப்புரம் மாவட்ட விவசாயிகள், செயல்படாமல் உள்ள புதுச்சேரி கூட்டுறவு சா்க்கரை ஆலைப் பகுதி விவசாயிகள் முண்டியம்பாக்கத்திலுள்ள ராஜ்ஸ்ரீ சா்க்கரை ஆலைக்கு கரும்புகளை அனுப்பினா். அவா்களுக்கு 2024-25 ஆம் ஆண்டுக்காக தமிழக அரசால் வழங்கப்படும் ஊக்கத் தொகை, சிறப்பு ஊக்கத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இதன் மூலம் சுமாா் 320 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையை விரைந்து வழங்க வேண்டும். புதுச்சேரி கூட்டுறவு சா்க்கரை ஆலைப் பகுதியை பொதுப் பகுதியாக அறிவித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் சங்கத் தலைவா் கலிவரதன் தெரிவித்தாா்.
மாவட்ட வேளாண் துணை இயக்குநா் சீனிவாசன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண் ) பிரேமலதா உள்ளிட்ட அலுவலா்கள் ஆட்சியரகம் வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டனா்.