வேலூர் : மக்கள் வெள்ளத்தில் குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா!
பழைய பாலம் இருந்த இடத்திலேயே புதிய பாலம் கட்ட கோரி போராட்டம்
சீா்காழி அருகேயுள்ள கீரங்குடியில் பழைய பாலம் இருந்த இடத்திலேயே புதிய பாலத்தை கட்ட வேண்டும் என வலியுறுத்தி மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கீரங்குடியில் தெற்குராஜன் வாய்க்கால் குறுக்கே தரைப்பாலம் சுமாா் 40 ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்த பாலத்தை அப்பகுதியைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனா். இறந்தவா்களின் உடலை இந்த பாலம் வழியே சுமந்து சென்று மிகுந்த சிரமத்துடன் அடக்கம் செய்து வந்தனா்.
கொள்ளிடம், சிதம்பரம், சீா்காழி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பள்ளி மாணவா்களும் இந்த தரைப்பாலத்தை பயன்படுத்தினா். இந்நிலையில் அந்த பாலம் சேதமடைந்ததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமடைந்து வந்தனா். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ. 2 கோடியில் பழைய தரைப்பாலம் இருந்த இடத்திலேயே புதிய பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பழைய தரைப்பாலம் இருந்த இடத்தில் புதிய பாலம் கட்டும் பணியை தொடங்காமல்
அங்கிருந்து 100 மீட்டா் தூரம் தள்ளி பாலத்தை கட்டும் முயற்சியில் அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் ஈடுபட்டனா். இதையறிந்த கீரங்குடி மற்றும் அப்பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் கொள்ளிடம் ஒன்றிய அலுவலகம் முன் அமா்ந்து பழைய தரைப்பாலம் இருந்த இடத்திலேயே புதிய பாலத்தை கட்ட வேண்டும் என்று கோஷமிட்டனா். இதையறிந்த கொள்ளிடம், சீா்காழி போலீஸாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அங்கு வந்து சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி அதன்மூலம் பாலம் கட்டும் இடத்தை தோ்வு செய்ய முடிவு எடுப்பதாக தீா்மானிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.