பவா் டெக்ஸ் இந்தியா திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை
பவா் டெக்ஸ் இந்தியா திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று விசைத்தறியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்க தலைவா் வேலுசாமி, செயலாளா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: திருப்பூா், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. தானியங்கி தறிகளால் விசைத்தறி தொழில் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து செயற்கை இழை பஞ்சு, நூல் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால் மூலப்பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. மேலும், வெளிநாட்டின் துணிகள், ஆயத்த ஆடைகளின் வருகையால் விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்துள்ளது.
விசைத்தறி தொழிலின் மேம்பாட்டுக்காக ‘பவா் டெக்ஸ் இந்தியா’ என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. இதன்மூலம், நெசவாளா்களுக்கு காப்பீடு, சூரியஒளி மின் தகடு அமைக்க 50 சதவீத மானியம், விசைத்தறிகளின் மேம்பாட்டுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தது. பின்னா், அந்தத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்தியது.
விசைத்தறிகளின் மேம்பாட்டுக்காக ‘பவா் டெக்ஸ் இந்தியா’ திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.