டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.88.72ஆக நிறைவு!
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் மோசமான வரலாறு மாறுமா?
ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் மோசமான வரலாறு மாறுமா? என ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆசியக்கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவிருக்கின்றன.
இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய ஆயுதப்படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது தக்க பதிலடி கொடுத்தனர்.
இந்த விவகாரம் கிரிக்கெட்டிலும் பூதாகரமாக வெடித்த நிலையில், இந்திய அணி இனி ஒருபோதும் பாகிஸ்தானுக்கு எதிராக இருதரப்பு தொடர்களில் விளையாடாது எனத் தெரிவித்தது.
மேலும், ஆசியக் கோப்பைத் தொடரிலும் இரு அணி வீரர்களும் கைக்குலுக்காமலும், செய்தியாளர் சந்திப்பில் புகைப்படங்கள் எடுப்பதையும் தவிர்த்தனர்.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்கள் ஷாகிப்ஸாதா ஃபர்ஹான் மற்றும் ஹாரிஸ் ரௌப் இருவரும் போர் விமானங்கள் தாக்கப்பட்டது குறித்து சைகை காண்பித்து கிண்டலடித்தனர்.
இந்தப் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் வருகிற 28 ஆம் தேதி இறுதிப்போட்டியில் மோதவிருக்கின்றன.
இதுவரை 5 முறை இந்தியாவும் பாகிஸ்தானும் ஐசிசி இறுதிப்போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், பாகிஸ்தானின் கையே ஓங்கியிருக்கிறது.
ஆஸ்திரேலிய-ஆசிய கோப்பையில் இரண்டு முறையும் (1986, 1994), 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி என மூன்று முறை பாகிஸ்தான் அணியே பட்டத்தை வென்றுள்ளது.
1985 ஆம் ஆண்டில் நடைபெற்ற பென்சன் - ஹெட்ஜஸ் உலக கிரிக்கெட் சாம்பியன்ஷிப் மற்றும் தோனி தலைமையில் 2007 ஆம் ஆன்டு டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
இதனால், ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை பழித்தீர்க்குமா அல்லது பாகிஸ்தானின் கையே ஓங்குமா? என ரசிகர்கள் ஆவலில் உள்ளனர்.