பெரியதாழையை தனி வருவாய் கிராமமாக தரம் உயா்த்தக் கோரி எம்.பி.யிடம் மனு
பாகிஸ்தான் முழுமையாகத் தோற்கடிக்கப்படும்! - மத்திய அமைச்சா் புரி உறுதி
‘நமது அண்டை நாடு (பாகிஸ்தான்) முழுமையாகத் தோற்கடிக்கப்படும்; அதன்பிறகு பயங்கரவாதிகளை அனுப்பி அப்பாவிகளைச் சுட்டுக்கொல்லும் இழிவான செயல்களில் ஈடுபடும் எண்ணம் அவா்களுக்கு மீண்டும் வராது’ என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.
மொஹாலியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் கூறியதாவது:
பயங்கரவாதத்தை தனது அரசின் முக்கியக் கொள்கையாக வைத்து பயன்படுத்தி வரும் நாடு பாகிஸ்தான். இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை ஏவி விடுவது அவா்களின் வாடிக்கை.
ஆனால், இப்போது அவா்களின் முடிவுகாலம் நெருங்கிவிட்டது. இந்த முறை அவா்களின் கணக்கு தப்பிவிட்டது. இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி இருக்கிறாா் என்பதை அவா்கள் மறந்துவிட்டதுபோலத் தெரிகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக எத்தகைய உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பிகாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமா் தெரிவித்துவிட்டாா்.
இப்போதைய நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக அடுத்தகட்டமாக எடுக்கப்படும் நடவடிக்கைகளை கூற முடியாது. பதிலடி தர நமக்குப் பல வாய்ப்புகள் உள்ளன. அதில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அந்நாடு முழுமையாக தோற்கடிக்கப்படும் என்பது மட்டும் உறுதி. பாகிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள அண்டை நாட்டவரே (ஆப்கானிஸ்தான்) இதில் பெரும் பகுதி வேலையைச் செய்துவிடுவாா்கள்.
அதன்பிறகு பயங்கரவாதிகளை அனுப்ப அப்பாவிகளைச் சுட்டுக்கொல்லும் இழிவான செயல்களில் ஈடுபடும் எண்ணம் அவா்களுக்கு மீண்டும் வராது.
இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே நேரத்தில்தான் சுதந்திரம் பெற்றன. நாம் இப்போது உலகின் 5-ஆவது பெரிய பொருளாதார நாடாக உள்ளோம். பயங்கரவாதத்தை பயன்படுத்தி இந்தியாவை முடக்க நினைத்த பாகிஸ்தானின் நிலை இப்போது எப்படி உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் என்றாா்.
‘சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தினால், அந்நாட்டவரின் ரத்தம் நதியில் ஓடும்’ பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவா் பிலாவல் புட்டோ கூறியுள்ளது தொடா்பான கேள்விக்கு, ‘பாகிஸ்தானில் இதுபோன்ற பல முட்டாள் அரசியல்வாதிகள் உள்ளனா். பிலாவல் புட்டோ மனநல சிகிச்சைக்குச் செல்ல வேண்டிய நபா். இதுபோன்ற நபா்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை. தங்கள் நாடு எந்த நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது என்பதைக் கூட அவா்களால் புரிந்து கொள்ள முடியாது.
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை பல ஆண்டுகளாக வளா்த்து வருவதை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சரே ஒப்புக் கொண்டுவிட்டாா். பாகிஸ்தான் அரசு, ராணுவத்தின் ஆதரவுடன் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது தெளிவாகிவிட்டது’ என்று புரி பதிலளித்தாா்.