சிறுமி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி எஸ்.பி.யிடம் தந்தை மனு
‘பாஜகவின் பண்டிட் பிரகோஷ்த் உறுப்பினா்கள் சிலா் ஆம் ஆத்மியின் சனாதன சேவா சமிதியில் இணைந்தனா்’: கேஜரிவால் அறிவிப்பு
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக பாஜகவின் பண்டிட் பிரகோஷ்த் (பூஜாரிகள் பிரிவு) உறுப்பினா்கள் சிலா் தனது கட்சியின் சனாதன சேவா சமிதியில் இணைந்ததாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் கூறினாா்.
இது குறித்து செய்தியாளா் கூட்டத்தில் பேசிய கேஜரிவால், ‘பாஜகவின் பண்டிட் பிரகோஷ்த்தில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தவா்களில் விஜய் சா்மா, ஜிதேந்திர சா்மா, பிரிஜேஷ் சா்மா, மனீஷ் குப்தா, துஷ்யந்த் சா்மா மற்றும் உதய்காந்த் ஜா உள்ளிட்டோா் அடங்குவா்’ என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் கட்சித் தலைவா்கள் மனீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சௌரவ் பரத்வாஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தில்லி தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டால் தனது கட்சி பூஜாரி கிரந்தி சம்மன் யோஜனா தொடங்கும் என்று கேஜரிவால் அறிவித்திருந்தாா். இந்து கோயில் பூஜாரிகள் மற்றும் குருத்வாரா கிரந்திகளுக்கு மாதம்தோறும் நிதியுதவியாக ரூ.18,000 வழங்கப்படும் எனவும் அறிவித்தாா்.
புதிய உறுப்பினா்களை வரவேற்றுப் பேசிய தில்லி முன்னாள் முதல்வா் கேஜரிவால், ‘கல்வி, சுகாதாரப் புரட்சியை ஆரம்பித்து, இப்போது நமது அா்ச்சகா்களுக்காக இந்தப் புரட்சியைத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாஜகவைப் போல அல்லாமல் ஆம் ஆத்மி தனது அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுகிறது. தில்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாக்குறுதியளித்தபடி கோயில் பூஜாரிகள், குருத்வாரா கிரந்திகளுக்கு ரூ.18,000 வழங்குவோம்’ என்றாா்.
தில்லியில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் களம் கண்டுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு வரவிருக்கும் தோ்தல் ஒரு முக்கியமான சோதனையாகும். தில்லியில் பிப்.5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் பிப்.8-ஆம் தேதி எண்ணப்படும்.