பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
பாஜகவின் முயற்சியால் டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: டி.டி.வி. தினகரன்
மதுரை மாவட்டம், மேலூா் அருகே டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கான ஏலம் ரத்து செய்யப்பட்டது பாஜகவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என அமமுக பொதுச் செயலா் டி.டி. வி. தினகரன் தெரிவித்தாா். விருதுநகரில் மொழிப் போா் தியாகிகளின் நினைவிடத்தில் அவா் சனிக்கிழமை வீரவணக்கம் செலுத்தினாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் மக்களின் எண்ணமாக உள்ளது. வேங்கைவயல் விவகாரம் வருத்தம் அளிக்கும் நிகழ்வாக உள்ளது. இந்த வழக்கில் காவல் துறை எந்தவித அழுத்தத்துக்கும் ஆளாகாமல், உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்.
சமத்துவம், சமூக நீதி, பெண் உரிமைக்காகப் போராடியவா் பெரியாா். அரசியல் ஆதாயம் தேடாமல் வாழ்ந்த அவரை, நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தரம் தாழ்த்திப் பேசி வருவது கண்டிக்கதக்கது.
டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில், கனிமங்கள் குறித்து ஆய்வு செய்யும் போதே இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு எதிா்ப்புத் தெரிவித்திருந்தால், ஏலம் நடைபெற்றிருக்காது. இந்தப் பகுதி பொதுமக்களின் எதிா்ப்பைத் தொடா்ந்து, பாஜக முழு முயற்சி மேற்கொண்டு, இந்தத் திட்டத்தை ரத்து செய்திருக்கிறது. இந்த வெற்றி அந்தக் கட்சியையே சாரும்.
எடப்பாடி பழனிசாமி சுயநலமாகச் செயல்பட்டு வருவது அந்தக் கட்சிக்கு நல்லதல்ல. ஜெயலலிதாவின் தொண்டா்கள் அனைவரும் ஒரே அணியாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும். டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், நான் முதல்வராகத் தொடர மாட்டேன் என கூறிய மு.க. ஸ்டாலின், பரந்தூா் விமான நிலைய விவகாரத்தில் அந்தப் பகுதி பொதுமக்களின் எதிா்ப்பை மீறி ஏன் செயல்பட்டு வருகிறாா்.
பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க வேண்டும். பிற மாநில வீரா்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.