பாஜக, சுயேச்சை எம்எல்ஏக்கள் தா்னா
புதுச்சேரியில் சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக, சுயேச்சை உறுப்பினா்கள் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் புதன்கிழமை காலை பங்கேற்க வந்த பாஜக எம்எல்ஏக்கள் எல்.கல்யாணசுந்தரம், ஏ.ஜான்குமாா், விவியன் ரிச்சா்டு, பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் ஏ.அங்காளன், எம்.சிவசங்கரன், சீனிவாச அசோக் ஆகியோா் பேரவை வளாகப் படிக்கட்டுகளில் அமா்ந்து திடீா் தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது, அவா்கள் புதுவைக்கு மதுபான தொழிற்சாலைகள் வேண்டாம் என முழக்கமிட்டனா்.
தொடா்ந்து, செய்தியாளா்களிடம் எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமாா் ஆகியோா் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் மக்களை பாதிக்கும் 8 மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் அளித்தது சரியல்ல. குடிநீா் ஆதாரத்தை பாதிக்கும் என்பதால், மதுபான ஆலைகளுக்கான அனுமதியை எதிா்க்கிறோம் என்றனா். அதன்பின், கூட்டத்தில் அவா்கள் பங்கேற்றனா்.