ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!
`பாதிக்கப்பட்ட பெண்களைப் புண்படுத்தும் கருத்துகள்' - அலகாபாத் நீதிமன்றத்தை விளாசிய உச்ச நீதிமன்றம்!
நாட்டின் மிகப் பழமையான நீதிமன்றங்களுள் ஒன்றான அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இருந்து வெளிப்படும் சமீபத்திய அவதானிப்புகள் பலவும் பெண்கள் மீது உணர்வில்லாத கண்ணோட்டத்தைப் பிரதிபலிப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
கடந்த சில மாதங்களில் அலகாபாத் நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் மற்றும் கருத்துகள் விமர்சனங்களை எதிர்கொண்டது.

முக்கியமாக, ஒரு நபர் அமர்வில் நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, சிறுமியின் பாலியல் வழக்கில், தவறாக தொட்டதையும், பைஜாமாவின் கயிற்றை அவிழ்த்ததையும் பாலியல் வன்புணர்வு முயற்சியாக கருத முடியாது என தீர்ப்பளித்திருந்தார்.
அதே நீதிமன்றத்தில் மற்றொரு நீதிபதியான சஞ்சய் குமார் சிங், "பாதிக்கப்பட்ட பெண் குடித்திருந்ததால் அவரே பிரச்னையை வரவழைத்துக்கொண்டுள்ளார்" எனக் கூறி பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கினார்.
உச்ச நீதிமன்றம் கேள்வி!
ஏற்கெனவே கடந்த மார்ச் 17-ம் தேதி நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா அளித்த தீர்ப்பை நிறுத்திவைத்து, அந்த வழக்கை தாமாக முன்வந்து மேல்முறையீட்டுக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்.

அப்போதே அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் அவதானிப்புகளை, "முற்றிலும் உணர்ச்சியற்றது, மனிதாபிமானமற்றது" மற்றும் "சட்டத்தின் கோட்பாடுகளுக்கு உட்படாதது" என காட்டமாக விமர்சித்தது உச்சநீதிமன்றம்.
மீண்டும் அதேப்போன்ற அவதானிப்புகள் வெளியானதால் அலகாபாத் நீதிமன்றத்துக்கு எதிராக காட்டமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய்.
"உயர் நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது? அதே நீதிமன்றத்தைச் சேர்ந்த மற்றொரு நீதிபதி இப்படிப்பட்ட கருத்தைக் கூறியிருக்கிறார்... ஏன் இதுபோன்ற அவதானிப்புகள்? இதுபோன்ற உணர்வுப்பூர்வமான வழக்குகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என கவாய் தலைமையில் நீதிபதி ஏ.ஜி.மாசிஹ் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
