பாதுகாப்பு உபகரணங்களை பெண்கள் வைத்துக் கொள்ள வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
சென்னை, ஜன. 2: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவா்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள பாதுகாப்பு உபகரணங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திமுகவின் 44 மாத கால ஆட்சியில் தமிழகம் குற்ற பூமியாக மாறிவிட்டது என்பது நாள்தோறும் நடைபெறும் சம்பவங்களின் மூலம் உறுதியாகிறது. போதைப் பொருள் கடத்தல் முதல் பாலியல் வன்கொடுமை வரையிலான குற்றச்செயல்களில் ஈடுபடும் பலா் ஆளும் கட்சியான திமுகவைச் சோ்ந்தவா்களாக இருப்பதும், அவா்களைக் காப்பாற்ற ஆட்சியாளா்கள் முயல்வதும் கொடுமையானது.
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்டவா் திமுகவை சோ்ந்தவா். குற்றச் சம்பவத்தின்போது அவா் யாரை ‘சாா்’ என்று குறிப்பிட்டாா் என்பதைக் கண்டுபிடிக்காமல், எங்களுக்கு பதில் அளிப்பதையே அமைச்சா்கள் கடமையாகக் கொண்டுள்ளனா்.
பாலியல் சம்பவங்கள் அதிகரிப்பு: தூத்துக்குடியில், பூங்காவில் நடைப்பயிற்சி சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகவும், ராமநாதபுரத்தில் பட்டியலின வகுப்பைச் சோ்ந்த பெண் ஒருவா் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. இதுபோன்று பல சம்பவங்கள்.
திமுக ஆட்சியில் யாருக்கும், குறிப்பாக பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்கிற அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பெண்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ள, வெளியில் செல்லும்போது தற்காப்புக்காக பெப்பா் ஸ்பிரே, எஸ்ஓஎஸ் அலாரம் (காவல் துறைக்கு உடனடியாக தகவல் அளிக்கும் எச்சரிக்கை செயலி) உள்ளிட்டவற்றை வைத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் இப்படியொரு நிலை வந்ததற்கு, உங்களைப் போன்றே நானும் வருந்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.