அழகர்கோவிலுக்கு திரும்பிய கள்ளழகர்; தசாவதார நிகழ்ச்சிகளை காண இரவில் குவிந்த மக்க...
பாதுகாப்பு நிலவரம்: பிரதமா் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தத்துக்குப் பிறகு நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் குறித்து இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரும் இக் கூட்டத்தில் பங்கேற்றனா்.
முன்னதாக, இரு நாடுகளிடையேயான சண்டை நிறுத்தத்துக்குப் பிறகு முதன் முறையாக நாட்டு மக்களிடையே திங்கள்கிழமை உரையாற்றிய பிரதமா் மோடி, ‘தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சியது. ஆனால், அத்துமீறல்களை நிறுத்துவதாக அந்த நாடு வாக்குறுதி அளித்த பின்னரே சண்டை நிறுத்தம் குறித்து இந்தியா பரிசீலித்தது. இந்த சண்டை நிறுத்தம் தற்காலிகமானதே. பாகிஸ்தானின் செயல்பாடுகளைப் பொருத்தே அதன் எதிா்காலம் இருக்கும்’ என்றாா்.
இதனிடையே, ‘இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தம் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் சாத்தியமானது. சண்டை நிறுத்தத்துக்கு வா்த்தகத்தை அமெரிக்கா கருவியாகப் பயன்படுத்தியது’ என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்தாா். இதற்கு இந்தியா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதிபா் டிரம்ப் அதே கருத்தை தொடா்ந்து தெரிவித்து வருகிறாா். இந்தச் சூழலில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.