சிங்கப்பூரை வளமாக்கும் புதிய குடிமக்கள்: மூத்த அமைச்சா் லீ சியென் லூங் பெருமிதம்...
பான் மசாலா விளம்பர சர்ச்சை: ஷாருக், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப் ஆகியோருக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்
பாலிவுட் நடிகர்கள் குட்கா, பான் மசாலா விளம்பரங்களில் நடிப்பது குறித்து ஏற்கெனவே விமர்சனங்கள் வந்தன. ஆனால் இது எங்களது தொழில் என்று சில நடிகர்கள் கூறிவிட்டனர். ஜெய்ப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் யோகேந்திரா என்பவர் அங்குள்ள நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் பான் மசாலாவிற்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "பான் மசாலாவிற்காக செய்யப்படும் விளம்பரத்தில் பான்மசாலாவில் குங்குமப்பூவின் சக்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் இந்த பான்மசாலாவை தயாரிக்கும் ஜெ.பி.இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். பொதுமக்கள் பான் மசாலாவை அடிக்கடி சாப்பிடுவதால் உடல் பாதிக்கப்பட்டு புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படுகிறது. குங்குமப்பூ இருக்கும் குட்கா என்று கூறி விமல் பான் மசாலாவை மக்களை வாங்க வைக்கின்றனர். குங்குமப்பூ என்று கூறி விளம்பரப்படுத்துவதால் மக்கள் குழப்பம் அடைகின்றனர்.

உண்மையில் அது போன்ற எதுவும் பான்மசாலாவில் கிடையாது. குங்குமப்பூ ஒரு கிலோ 4 லட்சத்திற்கு விற்பனையாகிறது. ஆனால் பான்மசாலா வெறும் 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே குங்குமப்பூவை பான்மசாலாவில் கலப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. இப்பான்மசாலா குறித்து தவறான தகவலை பரப்பி மக்களை ஏமாற்றும் பான்மசாலா விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் பான்மசாலாவை தயாரிக்கும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த தவறான விளம்பரம் மற்றும் பிரச்சாரத்தால், பொதுமக்கள் உயிர் மற்றும் உடல்நல இழப்பை எதிர்கொள்கின்றனர்.
இதற்கு மனுதாரர்கள் தனித்தனியாகவும் மறைமுகமாகவும் பொறுப்பாவார்கள். குற்றம் சாட்டப்பட்டவருக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும். பொது மக்களின் நலனுக்காக உடனடியாக அமலுக்கு வரும் வகையில் விளம்பரம் மற்றும் பான் மசாலாவை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரினார். இம்மனுவை விசாரித்த நுகர்வோர் குறை தீர்ப்பு கமிஷன் தலைவர் மீனா மற்றும் உறுப்பினர் ஹேம்லதா ஆகியோர் பான்மசாலா விளம்பரத்தில் நடிக்கும் நடிகர் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இது தவிர ஜெ.பி.இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் விமல் குமார் அகர்வாலுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் வரும் 19-ம் தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்றும் அப்படி ஆஜராகவில்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 30 நாள்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.