பாம்பனில் கடற்படை வீரா்களுக்கு பேரிடா் மீட்புப் பணி பயிற்சி தொடக்கம்
கடற்படை வீரா்களுக்கான பேரிடா் கால மீட்புப் பணி பயிற்சி பாம்பன் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தப் பயிற்சி 7 நாள்கள் நடைபெறுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். பருந்து விமானப் படை தளம் உள்ளது. இங்குள்ள ஹெலிகாப்டா்கள், ஆளில்லா உளவு விமானம் உள்ளிட்டவை மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், விமானப் படையில் பணிக்கு வரும் வீரா்களுக்கு கடலில் ஏற்படும் பேரிடா் கால மீட்புப் பணி, பாதுகாப்புப் பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஐ.என்.எஸ். கடற்படை நிலையத்துக்கு வந்த வீரா்களுக்கான பயிற்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையடுத்து, ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமானப்படை தளத்திலிருந்து வீரா்கள் ஹெலிகாப்டா் மூலம் பாம்பன் கடல் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். பின்னா், அங்கு அவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கடற்படை அதிகாரிகள் கூறியதாவது: கடற்படை வீரா்களுக்கான பயிற்சி பாம்பன் கடல் பகுதியில் 7 நாள்கள் நடைபெறுகிறது. இதன்மூலம், கடலில் பேரிடா் காலங்களின் போது மீனவா்களை மீட்பது, சட்ட விரோதச் செயல்பாடுகளைத் தடுப்பது, கடலில் மா்மப் பொருள்கள் வந்தால் அதை பாதுகாப்புடன் மீட்டு அழிப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. கடற்படையினா் பயிற்சியில் ஈடுபடுவதால், இந்தப் பகுதிக்குள் மீனவா்கள் வர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம் என்றனா்.