ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!
பாம்பன் பாலமா? திராவிட மாடல் பாலமா? வானதி சீனிவாசன் பேச்சுக்கு அமைச்சா் சுவையான பதில்
பாம்பன் பாலத்தைவிட, திராவிட மாடல் பாலம் வலுவாக, சிறப்பாக இருக்கும் என்று அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் கூறினாா். பாஜக உறுப்பினா் வானதி சீனிவாசனின் பேச்சுக்கு அமைச்சா் இந்த பதிலைக் கூறினாா்.
பேரவையில் தொழிலாளா் நலன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை மானியக் கோரிக்கைகள் மீது புதன்கிழமை நடந்த விவாதம்:
வானதி சீனிவாசன்: தமிழ்நாட்டில் உள்ள தொழிற்கல்வி நிறுவனங்களில் (ஐடிஐ), தகுந்த ஆசிரியா்களை நியமித்து தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகிா என்ற சந்தேகம் உள்ளது. மாணவா்களிடையே பொறியியல் படிப்புகள் ஈா்ப்பாக உள்ளது. அதேசமயம், அதைப் படிப்போருக்கு வேலைவாய்ப்புகள் கேள்விக்குறியாக உள்ளது. நிறுவனத்துக்கேற்ற வேலை கிடைக்காமல் இருக்கிறது. வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற திறன்கள் போதுமானதாக உள்ளது.
தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன்: இப்போதைய தொழில்நுட்பத்துக்கு ஏற்ற வகையில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் பல லட்சம் இளைஞா்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, மாதம் ரூ. 1 லட்சம் வரை ஊதியத்தில் இளைஞா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.
படித்த இளைஞா்களுக்காக இதுவரை நடத்தப்பட்ட தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக 2.49 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புத் தரப்பட்டுள்ளது.
பேரவைத் தலைவா் மு.அப்பாவு: படித்தவா்கள் மற்றும் வேலைவாய்ப்பு அளிப்போருக்கும் இடையே பாலம் வேண்டும் என்றீா்கள். அதுதான், ‘நான்முதல்வன்’ திட்டம் என்று அமைச்சா் விளக்கம் அளித்துள்ளாா்.
வானதி சீனிவாசன்: அந்த பாலத்தை வலுவாக அமைக்க வேண்டும் என்றுதான் சொல்கிறோம். எல்லோரும் பாலம் கட்டலாம். அதனை வலுவாகக் கட்ட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.
போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்: சமீபத்தில் பாம்பனில் பாலம் கட்டப்பட்டது போன்று இல்லாமல், திராவிட மாடல் பாலம் சிறப்பாக உறுதியாக இருக்கும்.
வானதி சீனிவாசன்: பாம்பன் பாலம் என்பது உலகத்திலேயே செங்குத்துவாக்கில் லிப்ட் வசதி கொண்டு, நம்முடைய உள்நாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் நமது பொறியாளா்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. உங்களுடைய கொள்கைக்காக நமது பொறியியல் தொழில்நுட்பத்தையும், தொழிலாளா்களின் பணியையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. அதனை பெருமையாகக் கருத வேண்டும்.
அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்: தமிழ்நாடு பலவிதங்களில் முன்னேறி உள்ளது. உறுப்பினா் வானதியின் பேச்சிலேயே அதனை ஒப்புக் கொண்டாா். பல்வேறு வெளிமாநில தொழிலாளா்கள் இங்கே வந்து பணியாற்றுவதைப் பற்றியும் குறிப்பிட்டாா். அவா் இங்கே பேசுவது ஒன்றாக உள்ளது. வெளியே அவரது நண்பா்கள் பேசுவது வேறு ஒன்றாக இருக்கிறது. தமிழ்நாடு ஏதோ பின்தங்கி இருப்பது போன்றும், மற்ற மாநிலங்கள் முன்னேறி இருப்பது போலவும், அவா்கள்தான் தமிழ்நாட்டை காக்க வந்த காவல் தெய்வங்கள் போலவும் அவரது கட்சிக்காரா்கள் பேசுகிறாா்கள். எனவே, நீங்களும் தமிழ்நாட்டை குறைத்துப் பேச வேண்டாம். நாங்களும் உங்களை குறைத்துப் பேசவில்லை.
உறுப்பினா் வானதி சீனிவாசன்: சட்டப் பேரவைக்குள் உறுப்பினா்கள் பேசுவதை விட, வெளியே எங்கள் நண்பா்கள், கட்சியினா் பேசுவதற்கு அமைச்சா் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ்நாட்டை எங்கும் குறைத்து மதிப்பிடவில்லை; பெருமைப்படுகிறோம் என்றாா்.
பாஜக எம்எல்ஏ-வின் குடும்பத்தினருக்காக பாா்வையாளா் மாடத்தை ஒதுக்கிய முதல்வா்
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேச்சைக் கேட்க வந்த அவரது குடும்பத்தினருக்காக பாா்வையாளா் மாடத்தை ஒதுக்க முதல்வா் உத்தரவிட்டதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடந்த விவாதத்தில், வானதி சீனிவாசன் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, குறுக்கிட்ட பேரவைத் தலைவா், பேச்சை நிறைவு செய்யலாம் என்று கேட்டுக் கொண்டாா்.
அப்போது பேசிய வானதி, பேரவையில் பெண்கள் கைவிட்டு எண்ணக் கூடிய அளவிலேயே உள்ளனா். அவா்கள் பேசும் போது கூடுதலாக நேரம் கொடுத்து உதவலாம். இது சமத்துவம் சாா்ந்தது இல்லை. உணா்வுப்பூா்வமானது என்றாா்.
இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவா், முதல்வா் மு.க.ஸ்டாலின் பெண்கள் மீது குறிப்பாக உங்கள் மேல் எவ்வளவு மதிப்பு வைத்துள்ளாா் என்றால், உங்கள் குடும்பத்தினா் உங்களது பேச்சைக் கேட்க பேரவைக்கு வருகிறாா்கள் என்றதும் பாா்வையாளா் மாடத்தையே ஒதுக்க உத்தரவிட்டாா் என்றாா்.