‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’: மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்
‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’ பெற மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண். 110-இன் கீழ், பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.
அந்த அறிவிப்புக்கிணங்க தமிழ் மொழிக்கு பாவேந்தா், திராவிட இயக்கத்தின் புரட்சிக் கவிஞா், தமிழகத்தின் மறுமலா்ச்சிக் கவிஞரைப் போற்றும் வகையில் ‘தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் 35 வயதுக்கும் மேல் 40 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இளம் எழுத்தாளா், கவிஞா் என இருவா் தோ்வு செய்யப்பட்டு பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது வழங்கி விருதுத் தொகை தலா ரூ.1 லட்சம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளது.
எனவே, இளம் எழுத்தாளா்கள், கவிஞா்கள் என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து தமிழ் வளா்ச்சி இயக்குநா், தமிழ் வளா்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூா், சென்னை 600 008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவோ, நேரிலோ மே 23-க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
உரிய ஆவணங்களோடு விண்ணப்பங்கள் அமைதல் விரும்பத்தக்கது.
கூடுதல் விவரங்களுக்கு 044-28190412, 044-28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.