`பாரம்பர்ய அடையாளத்தை பாழ்படுத்திட்டாங்க!' - ஊட்டி மலை ரயில் நிலை புனரமைப்பு சர்ச்சை!
நீலகிரியில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை தொடங்கப்பட்ட மலை ரயில் சேவை நூற்றாண்டுகளைக் கடந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் நீலகிரி மலை ரயிலுக்கு யுனெஸ்கோவின் உலக பாரம்பர்ய அந்தஸ்தும் வழங்கப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் இடையே பழைமையான நீராவி இயந்திரம் மூலமே இன்றளவும் மலை ரயில் இயக்கப்படுகிறது. நீலகிரி மலை ரயிலின் முக்கிய ரயில் நிலையங்களாக ஊட்டி, குன்னூர் ஆகிய இரண்டு ரயில் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், இந்த இரண்டு ரயில் நிலையங்களையும் புனரமைக்கும் பணிகளை ரயில்வே நிர்வாகம் தொடங்கியது.
பழைமை மாறாத வகையில் ரயில் நிலையங்களைப் புணரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், கண்காணிப்பு மற்றும் ஆலோசனைக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. ரயில்வே அதிகாரிகள் மட்டுமன்றி மாவட்ட அதிகாரிகள் வரலாற்று ஆர்வம் கொண்ட தன்னார்வலர்களை, அந்தக் குழுவில் இணைந்திருக்கிறார்கள். இந்நிலையில், புணரமைப்பு என்ற பெயரில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த மலை ரயில் நிலையங்களை பாழ்படுத்தி விட்டதாகக் கூறி கமிட்டியில் இருந்து ராஜினாமா செய்து, விலகியிருக்கிறார் நீலகிரி டாக்குமெண்டேஷன் சென்ட்டர் நிறுவனர் தர்மலிங்கம் வேணுகோபால்.
அதிருப்தி குறித்து தெரிவித்த தர்மலிங்கம் வேணுகோபால், "மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஊட்டி, குன்னூர் ரயில் நிலையங்களின் புனரமைப்புப் பணிகளைத் தொடங்கினார்கள். எந்த வழியிலும் பழைமையை மாற்றக் கூடாது என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். ஆனால், ஒரு கட்டத்தில் தெரிந்தே தவறு செய்தார்கள். பாரம்பர்ய அடையாளங்களை பாழ்படுத்தி அழிப்பது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கமிட்டி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன்" என்றார்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ``மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் அடிப்படையிலேயே பணிகள் நடைபெற்று வருகிறது" எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டனர்.