32 ஆண்டுகள் தீவில் தனியாக வாழ்ந்த நபர்! வெளியேறிய 3 ஆண்டுகளில் மரணம்!
பாலியல் வன்கொடுமை: ஞானசேகரன் மீது 4 பிரிவுகளில் வழக்கு!
அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஞானசேகரன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஞானசேகரனுடன் தொடர்புடைய மற்றொரு நபரைக் காவல் துறையினர் 3 தனிப்படைகள் அமைத்துத் தேடி வருகின்றனர்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு படித்து வரும் மாணவி, தனது ஆண் நண்பருடன் திங்கள்கிழமை கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்குவந்த அடையாளம் தெரியாத இருவர், மாணவரைத் தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக ஞானசேகரன் (33) என்பரை காவல் துறையினர் கைது செய்தனர். அவருடன் தொடர்பில் இருந்த மற்றொரு நபரைப் பிடிக்க காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதனிடையே இந்த விவகாரத்தில் காவல் துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை வெளியாகி (எஃப்.ஐ.ஆர்.) பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி, செல்போன் எண் உள்ளிட்டவை மறைக்கப்படாமல் வெளியிடப்பட்டிருந்தது.
முதல் தகவல் அறிக்கையை காவல் துறையின் அனுமதியின்றி வெளியிட்டிருக்க முடியாது என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து பாதிகப்பட்ட மாணவியின் விவரங்களை யாரும் பார்க்கவும் பதிவிறக்கவும் செய்யவும் முடியாதபடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்த புகைப்படமோ, முதல் தகவல் அறிக்கை நகலையோ இணையதளத்தில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.