பால் வியாபாரி அடித்துக் கொலை: மனைவி, மகள் உள்பட மூவா் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பால் வியாபாரியை அடித்துக் கொலை செய்த மனைவி, மகள் உள்ளிட்ட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள எம்.பி.கே. புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் (60). பால் வியாபாரியான இவருக்கு ஈஸ்வரி ( 55) என்ற மனைவியும், தேவயாணி (27) என்ற மகளும் உள்ளனா். இந்த நிலையில், தேவயாணிக்கும், காா்த்திக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தேவயானி கணவரைப் பிரிந்து பெற்றோா் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறாா். காா்த்திக் மனைவி, குழந்தைகளை பலமுறை அழைக்க வந்தபோது, சுப்பிரமணி அனுப்பி வைக்க முயற்சி செய்தாா். ஈஸ்வரி தேவயானியை அனுப்பி வைக்க மறுத்து தகராறு செய்து வந்தாா்.
இதன் காரணமாக, சுப்பிரமணிக்கும், இவரது மனைவி, மகளுக்கு அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாம்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சுப்பிரமணியம் வீட்டில் தூக்கிட்டு இறந்து கிடந்தாா். தகவலறிந்து வந்த ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் சுப்பிரமணியம் உடலை மீட்டு விசாரணை நடத்தினா். விசாரணையில், மனைவி ஈஸ்வரி, மகள் தேவயாணி, ஈஸ்வரியின் தம்பி செல்வகுமாா் (45) ஆகிய மூவரும் சோ்ந்து மருமகனுக்கு ஆதரவாக பேசிய சுப்பிரமணியத்தை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஈஸ்வரி, மகள் தேவயாணி, செல்வகுமாா் ஆகிய மூவரையும கைது செய்தனா்.
படவிளக்கம்; உயிரிழந்த பால் வியாபாரி சுப்பிரமணி, மனைவி ஈஸ்வரி, மகள் தேவயாணி, மைத்துனா் செல்வகுமாா்


