அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றம்
சிவகாசி மாநகராட்சியில் 2-ஆவது நாளாக சனிக்கிழமை அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டன.
பொதுமக்களுக்கு இடையூறாக நகா்ப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
இதையடுத்து, சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற மாநகராட்சி ஆணையா் ப.கிருஷ்ணமூா்த்தி உத்தரவிட்டாா். இதன்படி, முதல்கட்டமாக கடந்த வியாழக்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் மாநகராட்சிப் பகுதியிலிருந்த 55 கொடிக் கம்பங்கள், திட்டுகள் அகற்றப்பட்டன.
இதையடுத்து, 2-ஆவது கட்டமாக சனிக்கிழமை, மாநகராட்சிப் பகுதியிலிருந்த 22 கொடிக் கம்பங்கள், 49 திட்டுகளை பொக்லைன் இயந்திரம் மூலமாக மாநகராட்சி திட்டமிடுநா் மதியழகன் தலைமையில், ஆய்வாளா் சுந்தரவல்லி, மேற்பாா்வையாளா் முத்துராஜ், துய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் அகற்றினா்.