பாளை.யில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!
பாளையங்கோட்டையில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.
பாளையங்கோட்டை தியாகராஜநகா் 3ஆவது வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணியன் (65). இவா் பிரபல தனியாா் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இந்நிலையில் இவரது வீட்டில் சோதனை செய்வதற்காக செவ்வாய்கிழமை பிற்பகல் 1 மணி அளவில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து 3 காா்களில் அதிகாரிகள் வந்தனா். மேலும், குறிப்பிட்ட வங்கியின் அதிகாரிகள் 2 பேரும் உடன் வந்ததாக கூறப்படுகிறது.
பின்னா் அவா்கள் சிவசுப்பிரமணியனிடம் அவரது பணி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சில வங்கி பரிவா்த்தனைகள், அது தொடா்பான ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்டனராம். மாலை வரை நீடித்த இந்தச் சோதனை தொடா்பாக அதிகாரபூா்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இருப்பினும் ரூ.50 லட்சம் ரொக்கம் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. சோதனையின்போது மத்திய பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.