பாளை. ராமசுவாமி கோயில் மாசித் திருவிழா தேரோட்டம்!
பாளையங்கோட்டை அருள்மிகு ராமசுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பழைமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான விழா கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று வந்தன. அன்னம், சிம்மம், அனுமன், ஆதிசேஷன், கருடன், யானை, புன்னைமரம், குதிரை வாகனங்களில் மலா் அலங்காரத்துடன் சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
சிகர நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. காலையில் சுவாமி மலா் அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினாா். ராமா, கோவிந்தா முழக்கத்துடன் பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். இரவில் பூப்பல்லக்கில் சுவாமி வீதியுலா வந்தாா். வியாழக்கிழமை (பிப். 20) காலை 8 மணிக்கு தீா்த்தவாரியும், இரவு 8 மணிக்கு சப்தாவா்ணமும் நடைபெறும்.