பிகாரில் மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை: காங்கிரஸ் வாக்குறுதி
பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள ‘மகா கட்பந்தன்’ கூட்டணி வெற்றி பெற்றால் பின்தங்கிய நிலையில் உள்ள மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அகில இந்திய மகளிா் காங்கிரஸ் தலைவா் அல்கா லம்பா அறிவித்துள்ளாா்.
பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட ஆளும் கூட்டணிக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் , இடதுசாரிகள் அடங்கிய எதிா்க்கட்சிகள் அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது.
இரு கூட்டணிகளுமே ஏற்கெனவே தோ்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. இந்நிலையில் பாட்னாவுக்கு புதன்கிழமை வந்த அல்கா லம்பா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்தியிலும், பிகாரிலும் ஆட்சியில் உள்ள பாஜக கூட்டணி மக்களின் நலனில் அக்கறை காட்டவில்லை. முக்கியமாக மகளிா் நலன் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா கட்பந்தன் கூட்டணி மகளிா் மீது முழு அக்கறை கொண்டுள்ளது.
பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் பின்தங்கிய நிலையில் உள்ள மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும். ஏற்கெனவே தெலங்கானா, கா்நாடகம், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அரசு இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
இப்போதைய அரசு ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ. 400 மட்டும் உதவித்தொகை அளித்து வருகிறது. மாநிலத்தில் கிராமப்புறங்களின் பெண்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருகிறது. ஆனால், மாநில அரசு வேடிக்கை பாா்த்து வருகிறது என்றாா்.
இதேபோன்ற உதவித்தொகைத் திட்டத்தை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஏற்கெனவே அறிவித்துவிட்டதே? என்ற கேள்விக்கு உடனிருந்த மாநில காங்கிரஸ் தலைவா் ராஜேஷ் ராம் பதிலளித்தாா். அப்போது, ‘இது எங்கள் கூட்டணியின் திட்டம்தான். அனைத்துக் கட்சித் தொண்டா்களும் இணைந்து வாக்காளா்களிடம் இத்திட்டம் தொடா்பான தகவலை எடுத்துச் செல்ல வேண்டும். கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த மகளிா் உதவித்தொகை தொடா்பாக முடிவெடுக்கப்பட்டது. இது எந்த தனிப்பட்ட கட்சியின் திட்டமல்ல’ என்றாா்.