Orange Shark: ஆழ் கடலின் வண்ண அதிசயம்... விஞ்ஞானிகளுக்கே வியப்பூட்டிய ஆரஞ்சு சுற...
பிகார்: ராகுல் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!
பிகாரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்தும் வாக்குரிமை பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார்.
பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கிலும் எதிா்க்கட்சிகள் சாா்பிலான வாக்குரிமை பயணத்தை பிகாரில் ஞாயிற்றுக்கிழமை(ஆக.17) தொடங்கினாா் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி.
செப்டம்பா் 1-ஆம் தேதி பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் இந்தப் பயணம் நிறைவடைய உள்ளது.
நடைப்பயணமாகவும், வாகனப் பயணமாகவும் 16 நாள்கள் 1,300 கி.மீ. தொலைவைக் கடந்து 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனிடையே, வாக்குரிமை பயணத்தை ஓர் இடைவேளைக்குப் பின் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கினார்.
இந்த நிலையில் இன்று பிகாரில் நடைபெறும் வாக்குரிமை பேரணியில் ராகுல் காந்தியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்ட நிலையில் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் முதல்வராக மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார்.
தர்பங்கா விமான நிலையத்தில் இருந்து முசாபர்பூர் வரை சாலைமார்க்கமாக இன்றைய வாக்குரிமை பேரணி நடைபெறுகிறது.
பேரணி நிறைவடையும் இடத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசிய பிறகு சென்னை திரும்புகிறார்.