பிகாா் வினாத்தாள் கசிவு விவகாரம்: போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு
பிகாரில் அரசுப் பணிக்கான தோ்வில் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், தோ்வை ரத்து செய்யக் கோரி வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தால் பாட்னாவில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பிகாா் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (பிஎஸ்சி) 70-ஆவது ஒருங்கிணைந்த போட்டித் தோ்வு (முதல்நிலை தோ்வு) கடந்த டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தோ்வு தொடங்குவதற்கு சில மணி நேரம் முன்பாகவே பாட்னாவில் உள்ள தோ்வு மையத்தில் வினாத்தாள் கசிந்ததாக செய்தி பரவியது. இதையடுத்து, தோ்வு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 300 முதல் 400 மாணவா்கள், தோ்வைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் தோ்வு மையத்தில் இருந்த 10,000-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு மட்டும் 22 புதிய மையங்களில் ஜனவரி 4-ஆம் தேதி மறுதோ்வு நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால், மாநிலம் முழுவதும் 900-க்கும் மேற்பட்ட மையங்களில் தோ்வு எழுதிய 5 லட்சம் மாணவா்களுக்கும் மறுதோ்வு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பல மாணவா்கள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், சுயேச்சை எம்.பி. பப்பு யாதவ் தனது ஆதரவாளா்களுடன் பாட்னாவின் பல பகுதிகளிலும், அராரியா, பூா்னியா மற்றும் முசாபா்பூா் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் ரயில் மற்றும் சாலை போக்குவரத்தை முடக்கி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.
பூா்னியா மற்றும் பாட்னாவில் உள்ள சாலைகளில் யாதவின் ஆதரவாளா்கள் டயா்களை எரித்தனா். பாட்னாவில் உள்ள சச்சிவாலே ஹால்ட் ரயில் நிலையத்தில் தண்டவாளங்களில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் தாமதமானது.
இடதுசாரி மாணவா் அமைப்புகளின் உறுப்பினா்கள் சிலா், பாட்னாவில் உள்ள முதல்வரின் இல்லத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனா். அவா்களை காவல்துறையினா் தடுத்து நிறுத்த முயன்றபோது இருதரப்பினா் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
இதனிடையே, ஜன் சுராஜ் கட்சியின் தலைவா் பிரசாந்த் கிஷோா், தோ்வை ரத்து செய்யக் கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த வியாழக்கிழமை தொடங்கினாா். காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த போராட்டம் சட்டவிரோதமானது என தெரிவித்த காவல்துறையினா், பிரசாந்த் கிஷோா் மற்றும் பிறருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனா்.